தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும்

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும்
Published on

மணிகண்டம்,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் சார்பில் உயர்கல்வியில் உறுப்பு கல்லூரிகளின் பங்களிப்பு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நேற்று முன்தினம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்துறை தலைவரும், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான சோமசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துரையரசன் தொடக்க உரை ஆற்றினார்.

பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை தலைவர் சீனிவாசராகவன், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி முதல்வர் முகமது முகைதீன், பல்கலைக்கழக கல்வி நுட்பவியல் துறை தலைவர் ராம்கணேஷ் ஆகியோர் கருத்துரையாற்றினர். இதில் ராம்கணேஷ் பேசும்போது, இந்திய நாட்டின் வளர்ச்சி என்பது வகுப்பறையில் தான் உள்ளது. மிகச்சிறந்த வகுப்பறை அமையாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இன்னும் 10 ஆண்டுகளில் இந்திய நாட்டில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட உள்ளது. அது தமிழ்நாட்டில் இருந்து தான் ஆரம்பமாக உள்ளது என்று அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் கூறுகிறது. இந்த சவாலை எதிர்கொள்ள கூடிய அளவில் நாம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்று கூறினார்.

கருத்தரங்கில், சுமார் 10 ஆண்டுகளாக உறுப்புக் கல்லூரிகளை மிகசிறப்பாக நடத்தி ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிய பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, தமிழ்நாட்டில் உள்ள 41 உறுப்புக் கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளாக மாற்றி ஆணை பிறப்பித்த தமிழக முதல்-அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசுடைமை ஆக்கியபோது அதில் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் பணியாளர்களை அரசே ஏற்றுக் கொண்டது போல உறுப்பு கல்லூரிகளின் பணியாளர்களையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். முடிவில் பேரவை உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறினார். கருத்தரங்கில் உறுப்புக் கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com