தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் தலைமை வெற்றிடமாக உள்ளது - தங்கதமிழ்செல்வன் பேட்டி

தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு பின்னர் தலைமை வெற்றிடமாக உள்ளதாகவும், டி.டி.வி.தினகரன் மக்கள் விரும்பும் தலைமையாக இருக்கிறார் என்றும் தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் தலைமை வெற்றிடமாக உள்ளது - தங்கதமிழ்செல்வன் பேட்டி
Published on

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகருக்கு வந்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

கூட்டணி குறித்து எங்கள் துணை பொதுச்செயலாளர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கு ஒரு தொகுதி அளித்துவிட்டோம். இன்னும் இரண்டு கட்சியுடன் பேசி கொண்டிருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் கூட்டணி இறுதி செய்யப்படும். அனேகமாக நாங்கள் 38 தொகுதிகளில் போட்டியிடுவோம். தமிழக மக்கள் நலன்கருதியே நாங்கள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை. மக்களுக்கு பிடித்தமான தலைமை என்பதை தேர்தலில் நிரூபிப்போம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எம்.எல்.ஏ. இல்லாமல் ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டிப்பட்டி தொகுதியே புறக்கணிக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தினால் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் நான் நிச்சயம் போட்டியிடுவேன்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பின்னர் தலைமை வெற்றிடமாக உள்ளது.

புதிய தலைமையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த நம்பிக்கையில் நாங்கள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். டி.டி.வி.தினகரன் மக்கள் விரும்பும் தலைமையாக இருக்கிறார். அந்த வகையில் நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஸ்டார்ரபீக், ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், இணை செயலாளர் தவச்செல்வம், பேரூர் செயலாளர் பொன்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com