டெல்லியில் இருந்து எத்தனை பேர் பிரசாரத்திற்கு வந்தாலும் தமிழகத்தில் ஒரு போதும் தாமரை மலராது கனிமொழி எம்.பி. பேச்சு

டெல்லியில் இருந்து எத்தனை பேர் பிரசாரத்திற்கு வந்தாலும் தமிழகத்தில் ஒரு போதும் தாமரை மலராது என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
டெல்லியில் இருந்து எத்தனை பேர் பிரசாரத்திற்கு வந்தாலும் தமிழகத்தில் ஒரு போதும் தாமரை மலராது கனிமொழி எம்.பி. பேச்சு
Published on

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று காலையில் பழையகாயல் அருகே கோவங்காட்டில் திறந்த வேனில் சென்று தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் அவர், பழையகாயல், அகரம், முக்காணி, பெருங்குளம், பண்டாரவிளை, சிவகளை, ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீமூலக்கரை, பத்மநாபமங்களம், இசவன்குளம், வடக்கு தோழப்பன்பண்ணை, திருப்புளியங்குடி, பேரூர், பராக்கிரமபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்றனர்.

பிரசாரத்தின்போது கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
மத்திய பா.ஜனதா அரசின் உயர் பணமதிப்பு இழப்பு, சரக்கு, சேவை வரி விதிப்பு போன்ற தவறான கொள்கைகளால் சிறு குறு தொழில்கள் நலிவடைந்தன. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வறட்சி, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோதும், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோதும், ஆறுதல்கூட தெரிவிக்காதவர்கள் அனைவரும், தற்போது தேர்தலுக்காக டெல்லியில் இருந்து பிரசாரத்திற்கு தமிழகத்துக்கு வருகின்றனர். டெல்லியில் இருந்து எத்தனை பேர் தமிழகத்திற்கு வந்தாலும் தமிழகத்தில் தாமரை நிச்சயமாக ஒருபோதும் மலரவே மலராது. தாமரையை சூரியன் சுட்டெரித்து விடும். அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

நீட் தேர்வு திணிக்கப்பட்டதால், தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு சிதைந்து, தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தமிழகத்தின் உரிமைகளை பறித்து, நாசக்கார திட்டங்களையே மத்திய அரசு திணித்து வந்தது.

பா.ஜனதா அரசு கடந்த 5 ஆண்டுகளாக செய்த சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்க முடியுமா?. அ.தி.மு.க. அரசு இனி ஆட்சியில் இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவதாக கூறுகின்றனர். ஆனால் மத்திய மந்திரி பியூஸ் கோயல், நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம், மாறாக நீட் தேர்வை நடத்துமாறு அ.தி.மு.க.வை சமாதானப்படுத்துவோம் என்கிறார்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்.

மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலும், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் நல்லாட்சி அமையும். அப்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும். விவசாய கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகளில் 5 பவுனுக்கு குறைவான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். சரக்கு, சேவை வரி குறைக்கப்படும். தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 150 நாட்கள் வேலை வழங்கப்பட்டு, முறையாக சம்பளம் வழங்கப்படும். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

நான் என்றும் உங்களுடனே இருந்து உங்களுக்காக பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் ஓட்டப்பிடாரம், குலசேகரநல்லூர், கொம்பாடி, தளவாய்புரம், பாறைகூட்டம், வடமலாபுரம், மணியாச்சி, அக்கநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின் போது, தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் வக்கீல் சண்முகையா, ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம், தி.மு.க. மாநில மாணவர் அணி இணை செயலாளர் உமரிசங்கர் உள்பட பலர் உடன் சென்றனர். அதன் பின்னர் ஓசனூத்து கிராமத்தில் உள்ள இம்மானுவேல் சேகரன் உருவ சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com