தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என்று சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர்ராஜன் கூறினார்.
தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி
Published on

பென்னாகரம்,

சி.ஐ.டி.யு. தமிழ் மாநில கூட்டம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) வரை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறோம். சொத்துவரி 100 சதவீதம் உயர்த்துவது என்ற முடிவை மாநில அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் வீட்டு வாடகையில் இருந்து அனைத்தும் விலையேறும். ஆகவே சொத்து வரி உயர்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்.

பசுமை வழிச்சாலை திட்டத்தினால் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே 15 சதவீத விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதை விவசாயிகள் நிறுத்திக்கொண்டனர். ஏற்கனவே 3 சாலைகள் உள்ள நிலையில் இந்த திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பணத்தை விரயம் செய்ய உள்ளனர். எனவே இந்த திட்டம் தேவையற்றது.

சாலை பிரச்சினை, தூத்துக்குடி பிரச்சினை வந்த பிறகு ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஜனநாயக உரிமையை பாதுகாக்க நாங்கள் போராட்டம் நடத்த உள்ளோம். தொழிலாளர்களின் உரிமை, விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க ஆகஸ்டு 9-ந்தேதி சி.ஐ.டி.யு., விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 5-ந் தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.

ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டும் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், சமையல் தொழில் செய்பவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆற்றில் அதிக தண்ணீர் வரும் காலங்களில் பரிசல் ஓட்ட முடியாது. அப்போது ரேசன் பொருட்களும், நிவாரணமும் வழங்க வேண்டும். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சரை சந்திக்க உள்ளோம். கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் மாநில அளவிலான போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன், மாவட்ட செயலாளர் சி.நாகராசன், மாவட்ட தலைவர் ஜி.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com