தமிழகத்தில் அனைத்து தபால் நிலையங்களும் கணினிமயமாக்கப்படும் தலைமை அதிகாரி தகவல்

தமிழகத்தில் அனைத்து தபால் நிலையங்களும் கணினிமயமாக்கப்படும் என்று தலைமை தபால் துறை அதிகாரி சம்பத் தெரிவித்தார்.
தமிழகத்தில் அனைத்து தபால் நிலையங்களும் கணினிமயமாக்கப்படும் தலைமை அதிகாரி தகவல்
Published on

திருச்சி,

கிராமப்புற கிளை தபால் நிலையங்களில் வழக்கமான தபால் சேவையுடன், தபால் வங்கியின் சேவையும் தொடங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் திருச்சி அருகே வாழவந்தான்கோட்டையில் கிளை தபால் நிலையத்தில் தபால் வங்கி சேவை தொடங்கப்பட்டது. மேலும் டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் மேற்கொள்ளும் வசதியும் தொடங்கப்பட்டது. இந்த புதிய சேவையை தமிழ்நாடு வட்டத்தின் தலைமை தபால் துறை தலைவர் சம்பத் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் வாடிக்கையாளர்களுக்கு தபால் வங்கி கணக்கு புத்தகத்தையும் அவர் வழங்கினார். அதன்பின் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தபால் துறையை மத்திய அரசு கணினிமயமாக்கி வருகிறது. வங்கி சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து தபால் நிலையங் களும் கணினிமயமாக்கப்படும். விரைவில் பயோமெட்ரிக் முறையும் கொண்டுவரப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் கைரேகை மூலம் அனைத்து வசதிகளையும் பெறும் முறை கொண்டுவரப்படும்.

தமிழ்நாடு வட்டத்தில் 6,717 கிளை தபால் நிலையங்களில் டிஜிட்டல் முன்னேற்றம் கொண்டுவரப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து கிளை தபால் நிலையங்களிலும் டிஜிட்டல் மயமாக்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே 12 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையம் உள்ளது. இதன் மூலம் கடந்த ஓராண்டில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 783 பேர் பாஸ்போர்ட்டு பெற்றனர்.

மேலும் சென்னை தபால் நிலையம், ராணிபேட்டை, ஆரணி, காஞ்சிபுரம், திருவள்ளுவர், போடி, ராஜபாளையம், குன்னூர், தர்மபுரி, ஈரோடு ஆகிய 10 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையம் தொடங்கப்பட உள்ளது. பாஸ்போர்ட்டுக்கு எளிதில் விண்ணப்பிப்பதற்காக தபால் நிலையங்களில் சேவை தொடங்கப்படு கிறது. மாவட்டம் ஒவ்வொன்றிலும் பாஸ்போர்ட்டு சேவை மையம் தொடங்கப்படும்.

தபால் துறையில் தொடங்கப்பட்ட செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகத்தில் 16 லட்சத்து 500 பேர் சேர்ந்துள்ளனர். நாட்டிலே தமிழகத்தில் தான் அதிகம் பேர் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். முதல் இடம் பிடித்த தமிழகத்திற்கு வருகிற 30-ந்தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ள விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.

தபால் துறையில் ஏற்றுமதி செய்யும் வசதி தொடங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும். இ.மெயில், வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூகவலை தளங்கள் ஏராளமாக இருந்தாலும் கடித முறை இன்னும் இருந்துவருகிறது. கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மத்திய மண்டல தபால் துறை தலைவர் அம்பேஷ் உபமன்யு, இயக்குனர் தாமஸ் லூர்துராஜ், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் உடன்இருந்தனர். தபால் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com