தமிழகத்தில், சாதியை முன்னிலைப்படுத்தும் அரசியல் இனிமேல் எடுபடாது - தர்மபுரியில் கமல்ஹாசன் பேச்சு

தமிழகத்தில் சாதியை முன்னிலைப்படுத்தும் அரசியல் இனிமேல் எடுபடாது என்று தர்மபுரியில் நடந்த பிரசார கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார். தர்மபுரி 4 ரோட்டில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில், சாதியை முன்னிலைப்படுத்தும் அரசியல் இனிமேல் எடுபடாது - தர்மபுரியில் கமல்ஹாசன் பேச்சு
Published on

தர்மபுரி,

தமிழகம் தற்போது திருப்புமுனையை சந்தித்து கொண்டிருக்கிறது. மக்களுக்கான அரசியலை முன்னோக்கி எடுத்து செல்லும் அரிய வாய்ப்பு நமக்கு கிடைத்து உள்ளது. இங்கு 5 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்தவர் இங்கேயே குடிபெயர்ந்து இந்த தொகுதி மக்களின் நலன்களுக்காக பாடுபடுவேன் என்று கூறினார். சொன்னபடி அவர் இங்கு குடிபெயர்ந்தாரா?. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 3 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் இந்த மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளை இங்கேயே ஏன் உருவாக்கவில்லை? அதன் மூலம் உண்மையான வளர்ச்சியை இங்கு இதுவரை ஏன் ஏற்படுத்தவில்லை? இந்த கேள்வியை இளைஞர்கள் கோபத்தோடு எழுப்ப வேண்டும். இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு அரசியல்வாதிகளே காரணம். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் சுய லாபத்திற்காக உதவிசெய்யும் போக்கு அரசியல்வாதிகளிடம் உள்ளது.

தமிழகத்தில் சாதியை முன்னிலைப்படுத்தும் அரசியல் இனிமேல் எடுபடாது. எனவே சாதியை வீட்டை விட்டு வெளியே கொண்டு வராதீர்கள். மக்கள் நீதி மய்யம் சாதி,மதங்களை கடந்து அனைத்து மக்களின் உரிமைக்காக போராடும். நான் பிரசாரம் செய்யும் அனைத்து ஊர்களிலும் குடிநீர் பிரச்சினை உள்ளது. வசதி படைத்தவர்கள் ரூ.6 ஆயிரம் கொடுத்து டேங்கர் லாரியில் தண்ணீரை வாங்கி கொள்கிறார்கள். சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்? அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்குவது அரசின் கடமை. அந்த கடமை சரியாக நிறைவேற்றப்படவில்லை.

இந்த தொகுதியில் போட்டியிடும் ராஜசேகருக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான கட்சி. நாளை உங்கள் ஆட்சி. தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். நாளை நமதே.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

இதைத்தொடர்ந்து பாலக்கோட்டில் நடந்த பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com