தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வலுப்பெற்று வருகிறது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் அளவிற்கு தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வலுப்பெற்று வருகிறது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வலுப்பெற்று வருகிறது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
Published on

திருப்பூர்,

பா.ஜனதா கட்சியின் கோவை பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மண்டல தலைவர்களுக்கான பயிற்சி முகாம் பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடந்தது. கடைசி நாளான நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இந்த முகாமில் கலந்துகொண்டார்.

முகாமில் பங்கேற்றவர்கள் கட்சி பணியாற்றுவது குறித்தும், பொது வாழ்க்கையில் தூய்மையை கடைபிடிப்பது குறித்தும் பயிற்சி அளித்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் அளவிற்கு தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வலுப்பெற்று வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி அடிமட்ட மக்களிடையே எப்படிப்பட்ட செல்வாக்குடன் இருந்து வருகிறது என்பதை வெளிப்படுத்தும்.

கடல் வழியாக எந்த ஒரு உரிமமும் பெறாமல் கன்னியாகுமரியில் துறைமுகம் அமைய உள்ள பகுதியை பார்வையிடுவதற்காகவும், அவற்றை புகைப்படம் எடுப்பதற்காகவும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் நாட்டை காட்டி கொடுக்கும் விஷமிகளும் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இதனை மிக தீவிரமாக தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு அதை கண்காணிக்க தவறிவிட்டது.

இதன் பின்னரும் தமிழக அரசு கண்காணிக்கவில்லை என்றால், மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்க ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன. 25 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்தார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாகவும், விவசாயிகளுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையிலும் அய்யாக்கண்ணு தலைமையில் சென்ற விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மிகவும் மோசமாகவும் நடந்து கொண்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பா.ஜனதாவின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், திருப்பூர் மாவட்ட தலைவர் சின்னச்சாமி உள்பட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com