கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படும்

ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவேண்டிய கும்பாபிஷேக பணிகள் நடைபெறாத கோவில்களை கண்டறிந்து கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படும்
Published on

சென்னை,

சென்னை, வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் கோவில் மற்றும் சவுமிய தாமோதர பெருமாள் கோவில், அகத்தீஸ்வர சாமி கோவில்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்வது மற்றும் தேர் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் கோவில் வளாகம் முழுவதும் சுற்றி பார்வையிட்டார்.

கும்பாபிஷேக பணிகள்

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

சவுமிய தாமோதர பெருமாள் கோவில் சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதேபோல், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீசுவரர் சாமி கோவில் மற்றும் 90 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தேவி பாலியம்மன் கோவில்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேக பணிகள் நடைபெறாத கோவில்களை கண்டறிந்து கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்படும். திருப்பணி முடிந்த கோவில்களில் பக்தர்கள் வசதிக்காக கழிப்பிட, குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.

கோவில் தெப்பக்குளம், தேர் சீரமைக்கப்படும். தேவி பாலியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற விரைவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றவும் தேரை சீர் செய்யவும் அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. ஆகம விதிப்படி சன்னிதானங்கள் மாற்றி அமைக்கப்படும்.

திட்ட மதிப்பீடு செய்ய உத்தரவு

சவுமிய தாமோதர பெருமாள் கோவில் முகப்பில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தெப்பக்குளம், தேர் சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோவிலில் புராதன சின்னங்கள் பாதுகாக்க வேண்டிய வசதிகள் ஏற்படுத்தப்படும். அங்குள்ள நந்தவனம் சீரமைக்கப்படும்.

அகத்தீஸ்வர சாமி கோவில் அன்னதான கூடம், யாகசாலை ஆகியவற்றை பராமரிக்க அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சீர்செய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வுகளின்போது, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் ஹரிப்ரியா, செயல் அலுவலர் அன்புகரசி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com