தாராபுரத்தில், குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

தாராபுரத்தில் குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
தாராபுரத்தில், குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
Published on

தாராபுரம்

தாராபுரம் அருகே உள்ள கொல்லபட்டி கிராமத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று குடிநீர் வழங்கக்கோரி கொல்லப்பட்டியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:

தாராபுரம் ஒன்றியம், மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்டது கொல்லபட்டி கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு இதுவரை அமராவதி குடிநீர் திட்டத்தின் மூலமாகவோ அல்லது காவிரி குடிநீர் திட்டத்தின் மூலமாகவோ வினியோகம் செய்யப்படவில்லை.

குடிநீர் தேவைக்காக இங்கு ஏற்கனவே ஒரு பொது கிணறும் உள்ளது. இது தவிர ஊராட்சி மூலம் 2 ஆழ்துளை கிணறு போடப்பட்டது. அதில் ஒரு ஆழ்துளை கிணற்றுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது, மற்றோரு ஆழ்துளை கிணற்றுக்கு கை பம்பு மட்டுமே போட்டுத் தரப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியின் காரணமாக எங்கள் கிராமத்தில் உள்ள பொது கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது. இதனால் தற்போது குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமத்தில் கூடுதலாக ஒரு ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொடுக்கும்படி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம்.

இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக ஒரு குடம் குடிநீர் கூட கிடைக்காமல் அவதிப்படுகிறோம். குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உடனடியாக ஒரு ஆழ்துளைக் கிணறு அமைத்து தரவேண்டும். அதுவரை லாரிகள் அல்லது டிராக்டர்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com