தட்டார்மடத்தில் கடத்தி கொல்லப்பட்ட வியாபாரி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம் - போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்

தட்டார்மடத்தில் கடத்தி கொலை செய்யப்பட்ட வியாபாரி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் சிக்கிய தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
தட்டார்மடத்தில் கடத்தி கொல்லப்பட்ட வியாபாரி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம் - போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்
Published on

தட்டார்மடம்,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் நாம் தமிழர் கட்சி கொம்மடிக்கோட்டை பஞ்சாயத்து செயலாளராக இருந்தார். கடந்த 17-ந்தேதி இவர் தட்டார்மடம் அருகே கொழுந்தட்டு நாலுமுக்கு சந்திப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார் திடீரென்று செல்வனின் மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளியது.

பின்னர் அந்த காரில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல், செல்வனை காருக்குள் இழுத்து போட்டு கடத்தி சென்று, அடித்துக் கொலை செய்து, அவரது உடலை நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கடக்குளம் காட்டு பகுதியில் வீசிச் சென்றது.

இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தட்டார்மடம் அருகே உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும் தெரியவந்தது. இதில் திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது பொய் புகார்களில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாகவும், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஏற்பாடு செய்ததாகவும் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மீது செல்வனின் தாய் எலிசபெத் புகார் அளித்து இருந்தார்.

மேலும், இதுபற்றி சென்னை மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்ட செல்வன், மதுரை ஐகோர்ட்டிலும் முறையிட்டு முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருமணவேல் தரப்பினர், செல்வனை காரில் கடத்தி சென்று, அடித்துக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் மற்றும் சிலர் மீது கொலை, ஆள் கடத்தல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக முத்துராமலிங்கம், சின்னத்துரை, ராமன் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த நிலையில் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். செல்வனின் உடலை நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். செல்வனின் மனைவிக்கு நிவாரண உதவி, அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செல்வனின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் திசையன்விளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி, சொக்கன்குடியிருப்பு கிறிஸ்தவ ஆலயம் முன்பு செல்வனின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள தெருக்களிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.

இதற்கிடையே, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த செல்வனின் உடலை நேற்று மதியம் 2.40 மணிக்கு டாக்டர்கள் ஸ்ரீதர், சீதாலட்சுமி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பிரசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. மாலை 4.20 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்தது.

ஆனாலும் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செல்வனின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதனால் செல்வனின் உடல் மீண்டும் பிணவறையிலேயே வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com