வேட்பாளராக பா.ஜனதா அறிவிக்காத நிலையில் ஏக்நாத் கட்சே வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு; சுயேச்சையாக போட்டி?

மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மூத்த தலைவரான ஏக்நாத் கட்சேவை அக்கட்சி வேட்பாளராக அறிவிக்காத நிலையில் நேற்று திடீரென அவர் வேட்பு மனு தாக்கல் செய்தது சுயேச்சையாக போட்டியிடுவதாக பரபரப்பை ஏற்படுத்தியது.
வேட்பாளராக பா.ஜனதா அறிவிக்காத நிலையில் ஏக்நாத் கட்சே வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு; சுயேச்சையாக போட்டி?
Published on

மும்பை,

ஜல்காவை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே. கடந்த 2014 சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர், பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் போட்டியில் இருந்தவர். ஆனால் கட்சி தலைமை தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரி ஆக்கியது. இருப்பினும் மாநில மந்திரிசபையில் முதல்-மந்திரிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் ஏக்நாத் கட்சே இருந்தார்.

வருவாய்த்துறை, வேளாண்மைதுறை, கலால்துறை உள்ளிட்ட முக்கியமான இலாகாக்களை தன் வசம் வைத்திருந்த ஏக்நாத் கட்சே நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் பேசியது, நிலமோசடி உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் 2016-ம் ஆண்டு தனது மந்திரி பதவியை இழக்க நேரிட்டது

இந்தநிலையில், வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் அவர் முக்தாய்நகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட முடிவு செய்து இருந்தார். ஆனால் நேற்று முன்தினம் வெளியான பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியலில் ஏக்நாத் கட்சேயின் பெயர் இடம் பெறவில்லை.

இதனால் ஏக்நாத் கட்சேயின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏக்நாத் கட்சேவும் கடும் அதிருப்தி அடைந்தார்.

இந்தநிலையில், முக்தாய்நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஏக்நாத் கட்சே திடீரென தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனால் அவர் சுயேச்சை வேட்பாளராக சட்டசபை தேர்தல் களத்தில் இறங்கிவிட்டதாக பரபரப்பு உண்டானது.

இதுபற்றி ஏக்நாத் கட்சே கூறியதாவது:-

எனது பெயரை பா.ஜனதாவின் முதல் பட்டியலில் நான் பெரிதும் எதிர்பார்த்தேன். ஆனால் எனது பெயர் இடம் பெறவில்லை. இதனால் மனஉளைச்சல் அடைந்தேன். 40 ஆண்டுகளாக பா.ஜனதாவுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறேன். இன்று (நேற்று முன்தினம்) நல்லநாள் என்பதால் வேட்பு மனுவை தாக்கல் செய்தேன். 2-வது வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் நிச்சயம் இடம்பெறும் என நம்புகிறேன், என்றார்.

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதிக்குள் ஏக்நாத் கட்சே பா.ஜனதாவின் அங்கீகார கடிதத்தை சமர்ப்பிக்காவிட்டால் அவர் சுயேச்சை வேட்பாளராக கருதப்படுவார் என்பது குறிப்பிடத் தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com