அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
Published on

தாம்பரம்,

சென்னையின் முக்கிய ஆறான அடையாறு ஆறு தாம்பரம் அருகே ஆதனூரில் உருவாகிறது. ஊரப்பாக்கம் ஏரி, ஆதனூர் ஏரிகளில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீர் இந்த ஆற்றில் கலக்கும். செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரும் அடையாறு ஆற்றின் வழியாக வெளியேறும்.

இந்த ஆறு 42 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ஆதனூரில் உருவாகும் இந்த ஆறு முடிச்சூர், பெருங்களத்தூர், பழந்தண்டலம், திருநீர்மலை, அனகாபுத்தூர், கவுல்பஜார், மணப்பாக்கம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக சென்று வங்கக்கடலில் கலக்கிறது. சென்னையில் கனமழை பெய்தபோது அடையாறு ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதை சென்னை மக்கள் மறக்கமாட்டார்கள்.

இதேபோல் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது ஆதனூர் பகுதியில் இருந்து இந்த ஆற்றில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடியது. இந்த ஆற்றின் கரைகள் மற்றும் கிளை ஆறுகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் தான் வெள்ளப்பாதிப்புக்கு காரணம். எனவே ஆதனூரில் இருந்து மணப்பாக்கம் வரை அடையாறு ஆற்றின் கரைகளை பலப்படுத்தி ஆற்றை ஆழப்படுத்தும் பணிகள் 12 கிலோ மீட்டர் வரை காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் செய்தது.

இதற்காக வரதராஜபுரம், முடிச்சூர், ஆதனூர், ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், அனகாபுத்தூர் பகுதிகளில் கரையோர ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

மழைக்காலங்களில் கரை புரண்டு வெள்ளம் ஓடும் இந்த ஆற்றில் தற்போது கழிவு நீர் மட்டுமே ஓடுகிறது. திருநீர்மலை வரை ஆற்றின் நீர் சுத்தமாக உள்ள நிலையில் அனகாபுத்தூர் எல்லையில் உள்ள தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து 100க்கும் அதிகமான கழிவுநீர் லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீரும் ஆற்றில் ஊற்றப்படுகிறது. தற்போது ஆற்றில் கழிவு நீர் மட்டுமே தேங்கி சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. எனவே தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் வரும் தண்ணீரை இந்த ஆற்றில் தடுப்பணை அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என புறநகர் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் அதனை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னையில் உள்ள கூவம் ஆற்றைபோல அடையாறு ஆறும் மாறி வருவதை தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோடை காலம் தொடங்கும் முன்னே அடையாறு ஆற்றை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தொடர்ந்து கழிவுநீர் கலக்கப்படுவதால் நிலத்தடி நீரும் கடுமையாக மாசு அடைந்துள்ளது

இயற்கை நமக்கு அளித்த ஆறுகளை பாதுகாக்க தவறினால் வரும் காலத்தில் தண்ணீருக்கு அலையும் நிலை ஏற்படும் என நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள் பொதுப்பணித்துறையினருக்கு பலமுறை அறிவுறுத்தியும், பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் சென்னையின் மற்றொரு கூவமாக அடையாறு ஆறு மாறி வருகிறது

சென்னையின் புறநகர் பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நீர் நிலைகளில் தண்ணீர் தேக்கினால் மட்டுமே எதிர்காலத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதை தடுக்க முடியும் என்ற நிலையில் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு துறைகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு மழை காலத்திலும் இயற்கை நமக்கு அளிக்கின்ற மழைநீரை அடையாறு ஆற்றில் தேக்கி வைக்க தடுப்பணைகளை அமைத்தால் மட்டுமே அடையாறு ஆற்றை பாதுகாக்க முடியும் என்ற நிலை உள்ளது.

எனவே அடையாறு ஆற்றில் பழந்தண்டலம், திருநீர்மலை, அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகளை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பொதுபணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகல்கேணி மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை வேடிக்கை பார்க்காமல் அதனை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் ஏராளமான லாரிகளில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் கழிவுநீரை ஆற்றில் ஊற்றிச்செல்லும் கழிவுநீர் லாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கை அளித்த வரமான ஆற்றை அழிவு பாதையில் இருந்து மீட்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அதை அரசு துறைகள் நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com