ஆண்டிப்பட்டி பகுதியில், இரவு நேரங்களில் மணல் அள்ளும் கும்பல்

ஆண்டிப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் ஆறுகள், ஓடைகளில் இருந்து மணலை மர்ம கும்பல் அள்ளி செல்கிறது.
ஆண்டிப்பட்டி பகுதியில், இரவு நேரங்களில் மணல் அள்ளும் கும்பல்
Published on

கண்டமனூர்,

தேனி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஆறுகள், ஓடைகள் பகுதியில் இருந்து மணல் அள்ளுவதற்கான அனுமதி சீட்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை அதிகரித்துள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரும் மணல் இங்கு இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் தேர்தல் பணியில் வருவாய்த்துறை, காவல்துறை, கனிம வளத்துறை ஆகிய துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரவு நேர ரோந்து பணியில் அதிகாரிகள் ஈடுபட முடியவில்லை. இதனை அறிந்து கொண்டு, கட்டாறுகள், ஓடைகளில் இரவு நேரங்களில் ஒரு கும்பல் முகாமிட்டு அனுமதியின்றி மணல் அள்ளி வருகிறது.

அதில் கண்டமனூர், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி உள்பட பல கிராமங்களில் உள்ள காட்டாறுகள், ஓடைகளில் டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் நள்ளிரவில் மணலை அள்ளி செல்லும் சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே மழை இல்லாமல் இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு போய் உள்ளன. மேலும் கடுமையான வெயிலின் தாக்கத்தால் பூமி வெப்பமடைந்து, பயிர்கள் கருகி, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில் மேலும் மணல் அள்ளுவதால் வரும் காலங்களில் தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் இல்லாமல் போகும் அவலம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மணல் அள்ளும் கும்பலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com