நள்ளிரவில் பயங்கரம்: அடுக்குமாடி குடியிருப்பில் சாமியார் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

புதுவையில் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் சாமியார் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் பயங்கரம்: அடுக்குமாடி குடியிருப்பில் சாமியார் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

புதுச்சேரி,

வில்லியனூர் அருகே உள்ள ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தத்துவானந்தா(வயது 60). சாமியார் ஆன இவர் எப்போதும் காவி உடை அணிந்திருப்பார். அங்கு ஆசிரமும் நடத்தி வருகிறார். புதுவை பழைய சாரம் மொட்டைத்தோப்பு அண்ணாமலை நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தரை தளத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் நிர்வாகியுமாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் சாமியார் தத்துவானந்தாவின் வீட்டின் முன்பு கிடந்த பால் பாக்கெட் எடுக்கப்படாமல் இருந்தது. வீட்டின் கதவும் மூடி இருந்தது. இது குறித்து அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த காவலாளி ஆறுமுகத்திடம் விசாரித்தனர். அப்போது அவர் நேற்று முன்தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் வந்து தன்னை தாக்கி கொன்று விடுவேன் என்று மிரட்டியதால் உயிருக்கு பயந்து நான் அங்கிருந்து ஓடி விட்டேன். பின்னர் காலை 5 மணியளவில் தான் பணிக்கு வந்தேன் என்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்து சாமியார் தத்துவானந்தாவின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியபோது கதவு திறந்து கிடந்தது. அவர்கள் உள்ளே சென்று பார்த்ததில் அங்கு சாமியார் படுகொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் சாமியார் தத்துவானந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் அந்த குடியிருப்பில் 13 வீடுகள் உள்ளன. அதன் வரவு-செலவு கணக்கு முழுவதையும் அவரே கவனித்து வந்தார். சமீபத்தில் அங்கு வந்து சிலர் வாடகைக்கு வீடு கேட்டு பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேமரா பழுதாகி இருப்பது தெரியவந்தது. எனவே அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தன்று காவலாளியாக பணியாற்றிய ஆறுமுகம் (63) திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளார். அவருக்கு முன் அங்கு பணியில் இருந்த காவலாளிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com