தேவாரம் பகுதிகளில் அட்டகாசம்: காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டை

தேவாரம் பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
தேவாரம் பகுதிகளில் அட்டகாசம்: காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டை
Published on

தேவாரம்,

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக காட்டுயானை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. விளைபயிர்களை சேதப்படுத்துவதோடு, வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகிறது. இதுவரை இந்த காட்டுயானை 7 பேரை அடித்து கொன்றுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காட்டுயானையை பிடித்து யானைகள் முகாமுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் வன அலுவலர்கள் காட்டுயானையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து கோவை மாவட்டம் டாப்சீலிப் பகுதியில் இருந்து கரீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

காட்டுயானையை பிடிக்க கும்கி யானைகளுடன் சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாகன்கள் உடன் தங்கியுள்ளனர். காட்டு யானையை பிடிக்கும் பணி தொடங்கும் முன்பு முன்னோட்டமாக கும்கி யானைகளை காட்டு யானை வந்து சென்ற வழித்தடங்களில் வனத்துறையினர் அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் கும்கியானைகள் வந்ததை அடுத்து ஒரு வாரத்துக்கும் மேலாக விளைநிலங்களுக்குள் காட்டுயானை வரவில்லை. இதனால் காட்டு யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதையடுத்து காட்டுயானை எங்கு உள்ளது என்பதை அறிய மாவட்ட உதவி வனஅலுவலர் மகேந்திரன், உத்தமபாளையம் வனஅலுவலர் ஜீவனா ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் இரு குழுக்களாக பிரிந்து காட்டுயானையை தேடி வருகின்றனர். தற்போது கடந்த 2 நாட்களாக தொடர்ந்து வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் யானையை தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டுயானையை பிடிப்பதற்காக மலையடிவார பகுதியில் முகாமிட்டு உள்ளோம். அடர்ந்த வனப்பகுதி மற்றும் உயரமான மலைப்பகுதிகளுக்கு கும்கியானைகளை அழைத்து செல்வதும் சிரமம். கும்கியானைகள் சுவாசம் அறிந்து காட்டுயானை திடீரென கேரள வனப்பகுதிக்குள் செல்ல வாய்ப்புள்ளது.

தற்போது யானை எங்கு உள்ளது என்பதை அறிய சிறப்பு வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். காட்டு யானை வருகைக்காக கும்கி யானைகளுடன் தேவாரம் மலை அடிவார பகுதியில் காத்திருக்கிறோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com