நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் உதயகுமார் பேச்சு

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் உதயகுமார் பேச்சு
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிவகங்கையில் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் முன்னிலையிலும் நடைபெற்றது. பேரவை மாவட்ட செயலாளர் அசோகன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

தற்போது அ.தி.மு.க.வில் சார்பு அணி உறுப்பினர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பத்தில் பெயர் பதிந்தவர்களுக்கு அ.தி.மு.க. அமைப்பு தேர்தலுக்கும் வாக்குரிமை கொடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் அ.தி.மு.க. கிளைகள் உள்ள அனைத்து இடங்களிலும் அம்மா பேரவை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, பாசறை ஆகியவைகளுக்கு தனித்தனியான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது பல கட்சிகளின் தலைவர்கள் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி காணொலி காட்சி மூலம் கூட்டங்கள் நடத்தி, அத்துடன் நின்றுவிடாமல் மாவட்டம் முழுவதும் சென்று கலெக்டர் அலுவலகங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்தி கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான். அத்துடன் மாநிலம் முழுவதும் 2 கோடியே 8 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 6 மாதம் விலையில்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உள்ளார். நீங்கள் உறுப்பினர் சேர்க்கைக்கு கிராமங்களுக்கு செல்லும்போது அங்கு இளைஞர்களை சந்தித்து முதல்-அமைச்சரின் சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும்.

இந்த கொரோனா காலத்திலும் தமிழகத்தில் முதல்-அமைச்சரின் தீவிர நடவடிக்கையால் தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக்கூற வேண்டும். நடைபெறவுள்ள தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும். யாருடன் கூட்டணி என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், இளைஞரணி துணைச்செயலாளர் கருணாகரன், பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.எம்.எல். மாரி, முன்னாள் மாவட்ட செயலாளர் முருகானந்தம், முன்னாள் ஒன்றிய மாணவரணி செயலாளர் குமாரகுறிச்சி விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com