சட்டசபை வளாகத்தில் வாஜ்பாய் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி

புதுவை சட்டசபை வளாகத்தில் வாஜ்பாய் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சட்டசபை வளாகத்தில் வாஜ்பாய் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி
Published on

புதுச்சேரி,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது. இதைத்தொடர்ந்து நேற்று தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன. அரசு சார்பில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் சட்டசபை வளாகத்தில் வாஜ்பாயின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி காலை 6-15 மணிக்கே மலர் அஞ்சலி செலுத்திவிட்டு வாஜ்பாயின் இறுதி சடங்கில் பங்கேற்க டெல்லி புறப்பட்டு சென்றார்.

அதன்பின் சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமையில் அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், அன்பழகன், சிவா, ஜெயமூர்த்தி, போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி தலைமையில் வாஜ்பாயின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், சுகுமாரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், முன்னாள் வாரிய தலைவர்கள் வேல்முருகன், லூயிகண்ணையா, என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் புதுவையின் பல்வேறு பகுதிகளிலும் வாஜ்பாயின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரதமர் வாஜ்பாயின் மறைவினை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று காலை கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. நேரு வீதியில் கடைகளை சற்று தயக்கத்துடனேயே வியாபாரிகள் திறந்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது.

இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியினர் அங்கு வந்து கடைகளை மூடுமாறு வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன. அங்கு பரபரப்பும் நிலவியது. மாலையில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது.

இருந்தபோதிலும் புதுவை நகரின் பிற பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. அதேபோல் பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்களும் ஓடின.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com