ஆவடி மாநகராட்சி பகுதியில் பெண் டாக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று

ஆவடி மாநகராட்சி பகுதியில் பெண் டாக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி பகுதியில் பெண் டாக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று
Published on

ஆவடி,

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வரும் அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த 29 வயது பெண் டாக்டர் ஒருவர், பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வந்தார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

மேலும் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள 5-ம் பட்டாலியனை சேர்ந்த 2 பயிற்சி போலீஸ்காரர்களுக்கும், ராயபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக பணியாற்றும் திருமுல்லைவாயல் செந்தில் நகரை சேர்ந்த 46 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த 55 வயது நபர் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மையத்தில் சமையலராக வேலை செய்து வருகிறார். அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆவடி ஜே.பி. எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிறுநீரக நோயாளியான 41 வயது பெண் மற்றும் ஆவடி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செவிலியரின் 80 வயதான தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் 23 வயது போலீஸ்காரர் ஒருவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. மதுரையை சேர்ந்த அவர், பல்லாவரத்தில் தங்கி, சென்னை மாநகர போலீசில் வேலை செய்து வந்தார். அதேபோல் பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்த 55 வயது பெண் போலீஸ் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரும் சென்னை மாநகர போலீசில் பணியாற்றி வருகிறார்.

ஜமீன் பல்லாவரத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரியின் 2 குழந்தைகளுக்கும் நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் நாகல்கேணியில் 27 வயது நபருக்கும், பம்மலில் 3 பேருக்கும், செம்பாக்கத்தில் ஒருவருக்கும், தாம்பரம் ரங்கநாதபுரத்தில் ஒரு சிறுவனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவருக்கு கடந்த 1-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் அவரது குடும்பத்தினருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் 1 பெண் உள்பட 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் நங்கநல்லூர் இந்து காலனியில் காய்கறி மொத்த வியாபாரம் செய்யும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com