

ஆவடி,
ஆவடி மாநகராட்சி பகுதியில் நேற்று ஒரே நாளில் போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் டாக்டர், வக்கீல், மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலை ஊழியர், சென்னை ரிப்பன் மாளிகை இணை கமிஷனர் அலுவலக ஊழியர், மருந்தாளுனர், போலீஸ், வங்கி ஊழியர்கள் உட்பட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதுவரை ஆவடி மாநகராட்சியில் 477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதில் 244 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். நேற்று வரை 19 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் 2,144 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வேளச்சேரி ஆண்டாள் நகர் மற்றும் விரிவு பகுதிகளில் மாநகராட்சி உதவி பொறியாளர் ஈஸ்வரன், சுகாதார ஆய்வாளர் முத்துராஜ் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்று தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
அப்போது கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் நீண்டநேரம் இருந்தவர்களுக்கு காய்ச்சல் இருப்பதாக காட்டியது. அவர்களுக்கு சிறுது நேரம் கழித்து மீண்டும் சோதனை செய்தபோது காய்ச்சல் இல்லை என காட்டியது. பின்னர் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.