எரிச்சலை ஏற்படுத்தும் பொடியை தூவி வங்கியில் பணம் எடுத்து சென்ற பெண்ணிடம் நூதனமுறையில் திருட்டு

திருப்போரூர் இந்தியன் வங்கியில் பணம் எடுத்து சென்றவரிடம் நூதன முறையில் திருடப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு திருப்போரூர் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
எரிச்சலை ஏற்படுத்தும் பொடியை தூவி வங்கியில் பணம் எடுத்து சென்ற பெண்ணிடம் நூதனமுறையில் திருட்டு
Published on

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி பார்வதி. சின்னசாமி திருப்போரூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகளிர் குழுவில் சேர்ந்துள்ளார்.

நேற்று இந்தியன் வங்கியில் மகளிர் சுய உதவி குழுவின், ரூ.44 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு பழைய மாமல்லபுரம் சாலையில் நடந்து வரும்போது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பார்வதி முதுகில் எரிச்சலை ஏற்படுத்தும் பொடியை தூவினர்.

பார்வதிக்கு எரிச்சல் ஏற்பட்டதால் தனது கணவரின் மளிகை கடைக்கு சென்று பணப்பையை வைத்து விட்டு மற்றொரு அறைக்கு சென்றார்.

நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் சாலையில் 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை வீசி விட்டு கடையில் இருந்த சின்னசாமியிடம் உங்கள் மனைவி பணத்தை விட்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

சின்னசாமி கடையில் இருந்து வெளியே சிதறி கிடந்த பணத்தை எடுக்க சென்றபோது மர்ம நபர்கள் உள்ளே சென்று நூதனமுறையில் பணப்பையை திருடி சென்றனர். பின்னர் வெளியே தயாராக நின்றிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றுள்ளனர்.

இது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனையிட்டு வருகின்றனர்.

திருப்போரூர் வங்கியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com