பனியன் நிறுவனங்களில், தொழிலாளர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் உற்பத்தி பாதிப்பு - தொழில்துறையினர் கவலை

பனியன் நிறுவனங்களில், தொழிலாளர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் உற்பத்தி பாதிப்புக்கப்படுவதாக தொழில்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
பனியன் நிறுவனங்களில், தொழிலாளர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் உற்பத்தி பாதிப்பு - தொழில்துறையினர் கவலை
Published on

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்யும் போது தொழிலாளர்கள் செல்போனை அதிகமாக பயன்படுத்துவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் தொழில்துறையினர் கவலையடைந்துள்ளனர்.

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதனால் திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதுபோல் உள்நாட்டு வர்த்தகமும் அதிகமாக இருந்து வருகிறது. பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி நேர்த்தியாகவும், சுறு சுறுப்பாகவும் நடந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த காலங்களில் இருந்ததை போல் தற்போது பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி இல்லை என தொழில்துறையினர் பலர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு காரணம் தொழில்துறையினர் தொழிலாளர்கள் பயிற்சி பெறாமல் இருப்பது தான் காரணம் என நினைத்து வந்து கொண்டிருந்தனர். தற்போது உற்பத்தி பாதிப்பிற்கு முக்கிய காரணம் தொழிலாளர்கள் நிறுவனங்களில் வேலை செய்யும் போது செல்போன்கள் பயன்படுத்துவது என தெரியவந்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு தற்போது திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களையும் விட்டு வைக்கவில்லை.

பின்னலாடை நிறுவன தொழிலாளர்கள் வேலை செய்யும் போது செல்போன்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தான் நிறுவனங்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தொழில்துறையினர் கவலை அடைந்து வருகிறார்கள். இதனை தவிர்க்க தொழில்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது:-

திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு எப்போதும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறார்கள். தொழில்துறையினருக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதால், உடனே வேலை கேட்டு வருகிறவர்களை சேர்த்து விடுகிறார்கள். புதிதாக வேலைக்கு சேர்க்கப்படும் தொழிலாளர்கள் ஆடை தயாரிப்பில் ஈடுபடும் போது செய்யும் தவறுகளால் உற்பத்தி பாதிக்கும். இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருந்தது.

நாளடைவில் இந்த தொழிலாளர்கள் தொழிலை கற்றுக்கொண்டு வேலை செய்கிறார்கள். ஆடை தயாரிப்பும் மீண்டும் நேர்த்தியாக சென்று கொண்டிருக்கும். இந்நிலையில் தற்போது திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பலர் செல்போன் மோகத்தால் வேலை செய்யும் நேரங்களில் குறிப்பிட்ட நேரம் செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு செல்போனை பயன்படுத்துவதால் அவர்களது கவனம் ஆடை தயாரிப்பில் இருந்து சிதறுகிறது. இதன் காரணமாக ஆடை தயாரிப்பில் ஈடுபடும் போது பிழை ஏற்படுகிறது. கடந்த காலங்களை ஒப்பிடுகையில் ஆடை தயாரிப்புக்கு எடுத்துக்கொள்ளும் நேரமும் அதிகரிக்கிறது. இதனால் தொழில்துறையினருக்கு நேரமும், பணமும் விரயமாகிறது. செல்போன்கள் நிறுவனங்களுக்கு கொண்டு வரக்கூடாது என கண்டித்தால், உடனே வேலையை விட்டு விட்டு சிலர் சென்று விடுகிறார்கள்.

அந்த அளவிற்கு தொழிலாளர்களுக்கு செல்போன்கள் முக்கியமானதாக இருக்கிறது. தொழிலாளர்கள் வேலைக்கு வரும் போது செல்போன்கள் கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் இதனையும் மீறி செல்போன்களை கொண்டு வந்து மறைத்து வைத்து பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனை தடுக்கும் விதமாக தொழிலாளர்களின் செல்போன் டவர்களை செயல் இழக்க ஜாமர் பயன்படுத்தினால் அந்த ஜாமர் காரணமாக அருகில் உள்ள நிறுவனங்களில் உள்ளவர்களின் செல்போன்களும் டவர்கள் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் அந்த நிறுவனத்தினருடன் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. சிறிய நிறுவனங்களில் தொழிலாளர்கள் குறைவாக இருப்பார்கள்.

இதன் காரணமாக வேலைக்கு வரும் தொழிலாளர்களிடம் காவலாளியிடம் செல்போன்களை கொடுத்து விட்டு, பின்னர் வேலை முடிந்து திரும்பும் போது பெற்று செல்ல வைக்கிறார்கள். ஆனால் பெரிய பெரிய நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருவதால் அவர்களை சோதனை செய்யவும் முடிவதில்லை. இதனால் மாற்று வழி என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகிறோம். ஆடை தயாரிப்பின் போது கவனமும், ஈடுபாடும் தொழிலாளர்களுக்கு வேண்டும். அப்போது தான் தவறுகளை குறைக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com