பாரம்பரியத்தை காப்பது அவசியம்: தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தஞ்சை பெரியகோவிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பாரம்பரியத்தை காப்பது அவசியம்: தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் கடந்த 7, 8-ந் தேதிகளில் வாழும் கலை அமைப்பு சார்பில் தியான பயிற்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிராக வெங்கடேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பாரம்பரியமிக்க தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சி நடத்துவது என்பது விதிமீறல் ஆகும். இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றது. எனவே அங்கு தியான நிகழ்ச்சி நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனை கடந்த 7-ந்தேதி அவசர வழக்காக விசாரித்த ஐகோர்ட்டு, தஞ்சை பெரியகோவிலில் நடத்த ஏற்பாடு செய்திருந்த தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்தது. கோவில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சி நடத்த எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்று விளக்கம் அளிக்குமாறு தொல்லியல் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி இந்த வழக்கு ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தொல்லியல் மற்றும் தஞ்சை கோவில் அதிகாரிகள் நேரில் ஆஜராகி, தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பினருக்கு பஜனை நிகழ்ச்சி நடத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. கொட்டகை அமைக்கவோ, வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு செய்யவோ எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றனர்.

பஜனை நிகழ்ச்சிக்கு யார் அனுமதி கோரினாலும் அளிப்பீர்களா? இந்த கோவில் முழுமையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பரிந்துரைத்ததின் பேரில் பஜனை நிகழ்ச்சிக்கு தொல்லியல் துறையினர் அனுமதி வழங்கியது எப்படி, எந்த அடிப்படையில் கோவில் உள்ளே பந்தல் அமைக்க அனுமதி அளித்தீர்கள் என்று அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

தஞ்சை கோவிலின் தொன்மையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான் இந்த பிரச்சினையில் கோர்ட்டு தலையிடுகிறது என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. பழமையான கட்டிடக்கலைக்கு சான்றாகவும் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவில் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது.

மதம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் பெரியகோவில் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கும்போதும், அந்த நிகழ்ச்சிகள் மதத்தின் அடிப்படையிலும், கோவில் சம்பிரதாயத்தின்படியும் நடக்கிறதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் கோவிலின் பழமை, பாரம்பரியத்துக்கும், கோவிலில் உள்ள பழங்கால தொல்லியல் நினைவுச்சின்னங்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com