ரெயில்களின் முன்பதிவு பெட்டிகளில் பயணிகளின் பெயர் அட்டவணை ஒட்டத்தேவையில்லை ரெயில்வே வாரியம் உத்தரவு

ரெயில்களின் முன்பதிவு பெட்டிகளில் பயணிகளின் பெயர் அட்டவணையை ஒட்டத்தேவையில்லை என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ரெயில்களின் முன்பதிவு பெட்டிகளில் பயணிகளின் பெயர் அட்டவணை ஒட்டத்தேவையில்லை ரெயில்வே வாரியம் உத்தரவு
Published on

மதுரை,

ரெயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் பயணிகளின் பெயர், வயது, இருக்கை ஒதுக்கீடு, பி.என்.ஆர். எண் ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கும். பெரும்பாலான பயணிகள் தங்களது பெயர் அந்த அட்டவணையில் உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே ரெயில் பெட்டியில் ஏறுவது வழக்கம். இதற்கிடையே, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ரெயில்வே அமைச்சகம் ரெயில் பெட்டிகளில் பயணிகளின் பெயர் அட்டவணை ஒட்டும் நடவடிக்கையை ரத்து செய்துள்ளது.

இதற்காக சோதனை அடிப்படையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புது டெல்லி, டெல்லி, மும்பை சென்டிரல், சென்னை சென்டிரல், ஹவுரா, சியால்தா ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் பயணிகள் பெயர் அட்டவணை ஒட்டவில்லை. இந்த நிலையில், நாடு முழுவதிலும் உள்ள ஏ1, ஏ மற்றும் பி பிரிவு ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகளில் பயணிகளின் பெயர் அட்டவணையை ஒட்டத்தேவையில்லை என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு பதிலாக எலெக்ட்ரானிக் திரை மூலமாக பயணிகளின் பெயர் அட்டவணையை ரெயில் நிலையங்களில் பயணிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். அதேபோல, பயணிகளின் பெயர் அட்டவணையையும் பிளாட்பாரங்களில் ஒட்ட வேண்டும்.

அதன்படி, மார்ச் மாதம் முதல் 6 மாதங்களுக்குள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் டிஜிட்டல் திரையில் பயணிகளின் பெயர் அட்டவணையை காட்சிப்படுத்தும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட பின்னர், பிளாட்பாரங்களில் பெயர் அட்டவணையை ஒட்டத்தேவையில்லை. டிஜிட்டல் திரைகள் வேலை செய்யாத போது, பயணிகளின் பெயர் அட்டவணையை கண்டிப்பாக பிளாட்பாரங்களில் ஒட்ட வேண்டும்.

இது குறித்து பயணிகள் தங்களது கருத்துக்களை 3 மாதத்துக்குள் ரெயில்வே வாரியத்துக்க தெரிவிக்கலாம். பயணிகளின் கருத்தை கேட்டறிந்த பின்னரே அனைத்து ரெயில்நிலையங்களிலும் பயணிகளின் பெயர் அட்டவணை ஒட்டுவதை நிறுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் தென் மேற்கு ரெயில்வே பெங்களூரு கோட்டத்தில் தான் இந்த திட்டம் முதல்முறையாக செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் காகிதங்கள், அச்சிடும் செலவு ஆகியவற்றின் மூலம் ரூ.60 லட்சம் சேமிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, காகித சேமிப்பு, அச்சிடும் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரெயில்வே வாரியம் இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தென்னக ரெயில்வேயில் ஆண்டுக்கு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 28 டன் காகிதங்கள் மிச்சப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com