லஞ்ச வழக்கில் கைதான அதிகாரியின் வங்கி லாக்கரில் 13 கிலோ தங்கம், 32 கிலோ வெள்ளி பறிமுதல்

லஞ்ச வழக்கில் கைதான அதிகாரியின் 7 வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை நேற்று நிறைவடைந்தது. இதில் 13 கிலோ தங்க நகைகள், 32 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள், ரூ.10 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது பற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
லஞ்ச வழக்கில் கைதான அதிகாரியின் வங்கி லாக்கரில் 13 கிலோ தங்கம், 32 கிலோ வெள்ளி பறிமுதல்
Published on

கடலூர்,

கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரைச்சேர்ந்தவர் பாபு(வயது 55). இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றினார். கடந்த 11-ந்தேதி ஒரு புதிய வாகனத்துக்கு பதிவு சான்றிதழ் வழங்குவதற்காக அவர் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது உதவியாளர் செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.30 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் கைப்பற்றி விழுப்புரம் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

மேலும் அவரது பெயரில் இருந்த 21 வங்கி கணக்குகளையும், அவரது மனைவி மங்கையர்கரசி பெயரில் இருந்த 7 வங்கி லாக்கர்களையும், அவரது உதவியாளர் செந்தில் குமாரின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கினார்கள்.

இதைத்தொடர்ந்து கடலூரில் பாபுவின் மனைவி மங்கையர்கரசி பெயரில் 4 வங்கிகளில் இருந்த 7 லாக்கர்களை போலீசார் திறந்து சோதனை நடத்தினார்கள். இதில் கடந்த 19-ந் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்த 3 லாக்கர்களையும், 24-ந் தேதி கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்த 2 லாக்கர்களையும் திறந்து சோதனை நடத்தினார்கள்.

நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பாபுவின் மனைவி மங்கையர்கரசி முன்னிலையில் அவரது பெயரில் இருந்த ஒரு லாக்கரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் எழிலரசி, ஏட்டுகள் விஜயதாஸ், மூர்த்தி, சூடாமணி ஆகியோர் காலை 10.30 மணி அளவில் திறந்து சோதனை செய்தனர். இந்த சோதனை மதியம் 1-30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 3 கிலோ தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன.

பின்னர் திருப்பாதிரிப்புலியூர் இம்பீரியல் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மங்கையர்கரசி பெயரில் இருந்த லாக்கரை திறந்து சோதனை நடத்தினார்கள். இதில் 700 கிராம் தங்க நகைகள், 12 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் தலா 4 கிராம் எடைகொண்ட 4 ஜோடி வைர கம்மல்கள் வாங்கியதற்கான சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இத்துடன் கடலூரில் 4 வங்கிகளில் பாபுவின் மனைவி பெயரில் இருந்த 7 லாக்கர்களில் நடந்த சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 13 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிக்கட்டிகள், 22 கிலோ வெள்ளி டம்ளர்கள், தட்டுகள், நகைகள், குத்துவிளக்குகள் உள்ளிட்ட பொருட்கள், தலா 4 கிராம் எடை கொண்ட 4 ஜோடி வைர கம்மலுக்கான சீட்டுகள், ரூ.10 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை அந்தந்த வங்கிகளின் லாக்கர்களிலேயே வைத்து பூட்டி சீல் வைத்தனர். விரைவில் அவை அனைத்தையும் போலீசார் மதிப்பிட்டு விழுப்புரம் கோர்ட்டில் ஒப்படைப்பார்கள் என தெரிகிறது.

இதற்கிடையே வங்கிகளில் பாபுவின் பெயரில் இருக்கும் 21 சேமிப்பு கணக்குகளிலும் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது? என்பதை கணக்கிடும் பணியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று (வியாழக்கிழமை)பாபுவின் உதவியாளரான செந்தில்குமாரின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் செந்தில்குமாரின் பெயரில் உள்ள லாக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து சோதனை நடத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com