

திருவரங்குளம்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையில் கடந்த 2 நாட்களாக ஒரு சாக்கு மூட்டை அனாதையாக கிடந்தது. அதனை பொதுமக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற ஒருவர் அந்த சாக்குமூட்டையை பிரித்து பார்த்தார். அப்போது அதற்குள் ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டி கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
துண்டு, துண்டாக கிடந்தது
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மூட்டையை பிரித்து சோதனையிட்டனர். அப்போது அதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் ரூ.100, ரூ.50 நோட்டுகளும் சிறிது சிறிதாக துண்டிக்கப்பட்டு கிடந்தன. துண்டாகி கிடந்த பணத்தின் மதிப்பு ரூ.1 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆலங்குடி போலீசார் 500, 1000 பழை ரூபாய் நோட்டுகளை துண்டு, துண்டாக வெட்டி மூட்டையில் போட்டுச்சென்ற மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குடியில் பழைய ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.