பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை மீது 4 பிரிவுகளில் வழக்கு

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போராட்டத்தை தூண்டியதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை மீது 4 பிரிவுகளில் வழக்கு
Published on

பொள்ளாச்சி,

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சினேகலதா, வேலை நிறுத்தத்தின் போது பணிக்கு வந்த ஆசிரியர்களை போராட்டத்துக்கு ஆதரவு கொடுங்கள் என்று தூண்டும் வகையில் பேசியதாக வீடியோ வெளியானது.

இதுகுறித்து விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியை சினேகலதாவை பணியிடை நீக்கம் செய்தனர். இதற்கிடையில் பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) வெள்ளிங்கிரி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

ரமணமுதலிபுதூர் பள்ளி தலைமை ஆசிரியை சினேகலதா அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொள்வதற்கும், அச்சுறுத்தும் விதமாக கருத்துக்களை எடுத்து சொல்லி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த செய்தி வீடியோவாக வெளியிடப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கிருந்த ஆசிரியர்களிடம் விசாரித்தோம்.

கடந்த 22-ந்தேதி 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, எந்தவித அனுமதியும் இன்றி உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் ஓய்வறையில் இருந்த ஆசிரியர்களிடம் பாடம் நடத்தக்கூடாது என்று கூறியதுடன், அச்சுறுத்தும் விதமாக அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவியது. எனவே போராட்டத்தை தூண்டிய சினேகலதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

புகாரை பெற்றுக்கொண்ட பொள்ளாச்சி மேற்கு போலீசார், தலைமை ஆசிரியை சினேகலதா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com