வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
Published on

நெல்லை,

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் மகாராஜன், மோடியின் உருவப்படத்தை வரைந்து உள்ளார். அவர், பல்வேறு மாநிலங்களில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசிய பல்வேறு முகபாவனைகள், உடைகள் ஆகியவற்றை வரைந்து உள்ளார். மொத்தம் 116 ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

இந்த ஓவியங்கள் பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த ஓவியங்களை பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை பார்வையிட்டார். மாணவர் மகாராஜனுக்கு, சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர் மகாராஜன் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படங்களை அழகான ஓவியமாக வரைந்துள்ளார். அவர் ஒரு படம் வரைவதற்கு 4 மணி நேரம் செலவிட்டுள்ளார். இந்த 116 ஓவியங்களையும் 4 மாதங்களில் வரைந்து உள்ளார். இந்த ஓவியங்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

விவசாயிகளுக்கான சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்றும்போது எதிர்க் கட்சிகள் எப்படி நடந்து கொண்டார்கள்? என்பதை அனைவரும் அறிவார்கள். சபைகளுக்கு என்று தனியாக மாண்பு உள்ளது. அதை எதிர்க்கட்சிகள் கடைபிடிக்க வேண்டும்.

அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகளிடம் முதல்-அமைச்சர் வேட்பாளருக்கு பஞ்சம் உள்ளது. தி.மு.க. தலைவரை தவிர வேறு யாரையும் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் கூட்டணி சிதறு தேங்காய் போல் உடைந்துவிடும்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும். சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் அந்தந்த தொகுதிகளில் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. ஆனால், எதிர்பாராதவிதமாக இடைத்தேர்தல் வந்து விட்டது. அதற்கான பணியினை நான் தொடங்கி விட்டேன். அமைச்சர்கள் தற்போது பா.ஜனதாவினரை பற்றி பேசி வருகிறார்கள். வால்கள் ஆடுவதை பற்றி கவலையில்லை. வாய் என்ன சொல்கிறது என்பதே முக்கியம். விவசாயம் குறித்து தெரியாத மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் குறித்து கருத்து கூறுவதற்கு தகுதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, நெல்லை மாவட்ட தலைவர் மகராஜன், பொது செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர் முத்து பலவேசம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com