வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - நயினார் நாகேந்திரன் பேட்டி

வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - நயினார் நாகேந்திரன் பேட்டி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில், மாற்று கட்சியினர் பா.ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில், மாற்று கட்சியை சேர்ந்த வக்கீல் சுரேஷ்குமார் உள்பட 200 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.

பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபகாலமாக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜனதா அலை வீசுகிறது. பலர் மாற்று கட்சியில் இருந்து பா.ஜனதாவில் சேர்ந்து வருகின்றனர். அதனை பார்க்கும்போது எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தமிழுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறோம். அதற்காக இந்தியை நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் தி.மு.க அதனை வைத்து அரசியல் செய்கிறது. என்றும் பா.ஜனதாவினர் தமிழுக்கு தான் முன்னுரிமை அளிப்பார்கள். தாய்மொழி தமிழ்தான், ஆங்கிலம் இணைப்பு மொழி, சமஸ்கிருதம் நமது வேத மொழி, இந்தி நாம் படிக்க வேண்டிய மொழி.

கன்னியாகுமரி தொகுதியில் தலைமை அறிவித்தால் போட்டியிடுவேன். இதுவரை தலைமையில் இருந்து எதுவும் கூறவில்லை. அங்கு ஏற்கனவே முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட தொகுதி. அதனால் அவருக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கும் சூழல் உள்ளது.

பா.ஜனதா கட்சியில் மாற்று கட்சியினர் அதிகமாக இணைந்து வருகின்றனர். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளோம், அவர்களிடம் அதிகப்படியான இடங்களை கேட்பதற்கு இதுபோன்ற இணைப்பு நிகழ்ச்சி ஊக்கமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை. தேர்தல் நெருங்கும்போது அது பற்றி தெளிவாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com