கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற மூதாட்டி பலி - ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உள்பட 36 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஆரணி மதுரை பெரும்பட்டூரை சேர்ந்த மூதாட்டி பலியானார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உள்பட 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற மூதாட்டி பலி - ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உள்பட 36 பேருக்கு தொற்று உறுதி
Published on

ஆரணி,

ஆரணியை அடுத்த மதுரைபெரும்பட்டூர் கிராமத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டி கடந்த ஒருவார காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து நேரடியாக மதுரை பெரும்பட்டூரில் உள்ள சுடுகாட்டிற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டு 12 அடி ஆழம் கொண்ட குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

இறந்த மூதாட்டியின் உறவினர்கள், அவருடன் நெருங்கி பழகியவர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கிறது. நேற்று ஒரேநாளில் கொரோனாவால் பச்சிளம் குழந்தை உள்பட 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்விவரம் வருமாறு.

திருவண்ணாமலை நகராட்சியில் 5 ஆண்கள், 2 பெண்கள், கலசபாக்கம் பகுதியில் இளம்பெண், மங்கலத்தில் 2 ஆண்கள், 2 இளம்பெண்கள், காட்டாம்பூண்டியில் 2 ஆண்கள், பிறந்து 54 நாளான பச்சிளம் பெண் குழந்தை, இளம்பெண், செங்கத்தில் ஒரு ஆண், 2 பெண்கள், போளூரில் 2 வாலிபர்கள், பெருங்கட்டூரில் 3 வாலிபர்கள், கீழ்ஆரணியில் 2 வாலிபர்கள், நாவல்பாக்கத்தில் 4 ஆண்கள், ஆக்கூரில் ஒரு ஆண், மேற்கு ஆரணியில் ஒரு பெண், கீழ்பென்னாத்தூர் ஒரு ஆண், ஒரு பெண், தண்டராம்பட்டில் ஒரு வாலிபர் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 672 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை 413 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் உள்ள வாகன விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர்களில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நிலையம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 29 ஆயிரத்து 428 பேருக்கு முடிவுகள் வெளிவந்துள்ளது. அதில் 698 பேருக்கு பரிசோதனை முடிவு வரவில்லை.

672 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 249 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 28 பேர் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 233 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 117 பேர் மும்பையை சேர்ந்தவர்கள், 45 பேர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒரு பெண் காய்ச்சல் வந்ததால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் - கிருஷ்ணாவரம் கிராமத்தை 2 வாலிபர்கள் சென்னையில் இருந்து வந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து 3 பேரும் செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com