கிராமப்புறங்களில் சுகாதார மருத்துவ வசதிகளை செய்து தருவதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது

கிராமப்புறங்களில் சுகாதார மருத்துவ வசதிகளை செய்து தருவதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
கிராமப்புறங்களில் சுகாதார மருத்துவ வசதிகளை செய்து தருவதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது
Published on

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே சந்தவாசல் கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் கந்தசாமி, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் கே.குழந்தைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.சுந்தர் வரவேற்றார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சந்தவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 2 டாக்டர்கள் உள்பட 14 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

கிராமப்புறங்களில் சுகாதார மருத்துவ வசதிகளை செய்து தருவதில் இந்திய அளவில் தமிழகம் 99.9 சதவீதம் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் தினமும் 1,800 முதல் 2000 வரை குழந்தைகள் பிறக்கிறது. குறிப்பாக ஒரு ஆண்டில் பிறக்கும் 10 லட்சம் குழந்தைகளில், 7 லட்சம் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறக்கிறது. மேலும் குழந்தை பிறந்தவுடன் 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்யும் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ நாள் வரையில் என்னென்ன சிகிச்சைக்காக வரவேண்டும் என்பதை போன் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பிறக்கும் 1 லட்சம் குழந்தைகளில் 130 குழந்தைகள் இறப்பு என்பது, தற்போது 62 ஆக குறைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், தூசி கே.மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா, திருவண்ணாமலை மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் ஆர்.மீரா, முன்னாள் கவுன்சிலர் கண்ணபிரான், பால் கூட்டுறவு சங்கதலைவர் சிவ.சீத்தாராமன், சந்தவாசல் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயகாந்திவெங்கடேசன், ஊராட்சி கழக செயலாளர் பன்னீர்செல்வம், கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் பி.விஜயன், வக்கீல் கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சி செயலாளர் சுரேஷ், படவேடு கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் லோகன், வாழியூர் டாக்டர் கிரிதர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சந்தவாசல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஷைலஸ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com