கோவை சுங்கச்சாவடிகளில் 70 சதவீத வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் கட்டணம் வசூல்

கோவை சுங்கச்சாவடிகளில் 70 சதவீத வாகன ஓட்டிகளிடமிருந்து பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் பாதையில் ஸ்டிக்கர் ஒட்டாமல் வந்த வாகனங்களுக்கு இருமடங்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.
கோவை சுங்கச்சாவடிகளில் 70 சதவீத வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் கட்டணம் வசூல்
Published on

கோவை,

இந்தியாவில் பி.ஓ.டி. (பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்பர்) என்ற முறையில் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சாலைகளை தனியார் நிறுவனங்கள் அமைத்து அதில் செல்லும் வாகனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களிடமிருந்து இதுவரை ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்பின்னர் அதற்கான காலக்கெடு டிசம்பர் 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு தரப்பினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க காலக்கெடு ஜனவரி 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. அந்த ஸ்டிக்கர் இல்லாத வாகன ஓட்டிகளிடமிருந்து ரொக்கப் பணம் வசூலிக்கப்பட்டது. கோவை கணியூர் மற்றும் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களுக்காக 4 பாதைகளும்(லேன்), ரொக்கம் வசூலிப்பதற்காக 2 பாதைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியதாவது:-

கோவை சுங்கச்சாவடிகளில் வந்த வாகனங்களில் 70 சதவீத வாகனங்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தன. அந்த வாகன ஓட்டிகளிடமிருந்து பிரத்யேக கருவியின் உதவியினால் பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் சுங்கக்கட்டணம் ஆன்லைனில் வசூலிக்கப்பட்டது. சில வாகன ஓட்டிகள் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை டாப் அப் செய்யாமல் வந்திருந்தனர். அத்தகைய வாகன ஓட்டிகளிடமிருந்து ரொக்கப்பணம் வசூலிக்கப்பட்டது. சுங்கச்சாவடிகளுக்குள் வந்து நிற்கும் வாகனங்களின் முன்புற கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள பாஸ்டேக் ஸ்டிக்கர் மீது பிரத்யேக கருவியை கொண்டு ஸ்கேன் செய்தால் அந்த வாகனத்திற்கான கட்டணம் ஆன்லைனில் தன்னிச்சையாக குறைக்கப்படும். ஒரு வேளை ஸ்டிக்கர் டாப் அப் செய்யாமல் இருந்தால் அது முடக்கப்பட்ட விவரம் பிரத்யேக கருவியில் தெரியும். அத்தகைய வாகன ஓட்டிகளிடமிருந்து ரொக்கப்பணம் வசூலிக்கப்படுகிறது.

ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனி பாதைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் தனி பாதையில் வந்தன. அத்தகைய வாகனங்கள் பாஸ்டேக் ஸ்டிக்கருக்காக ஒதுக்கப்பட்ட பாதையில் வந்தால் அந்த வாகன ஓட்டிகளிடமிருந்து இருமடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. உதாரணத்துக்காக அந்த வாகனத்துக்கு சுங்கச்சாவடியில் ரூ.50 கட்டணம் என்றால் அபராதமாக ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

சுங்கச்சாவடிகளில் இதுபற்றிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் அவற்றை பார்த்து சென்றால் இரு மடங்கு அபராதம் செலுத்துவதை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com