தூத்துக்குடியின் வளர்ச்சியில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

தூத்துக்குடியின் வளர்ச்சியில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தூத்துக்குடியின் வளர்ச்சியில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
Published on

தூத்துக்குடி,

இந்திய தொழில் வர்த்தக சங்கம் தூத்துக்குடி சார்பில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா தூத்துக்குடியில் நேற்று நடந்தது. சங்க தலைவர் டி.ஜான்சன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எட்வின்சாமுவேல் பேசினார். சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, 37 சிறந்த ஏற்றுமதியாளர் மற்றும் தூத்துக்குடி துறைமுக உபயோகிப்பாளர் விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசு, ஏற்றுமதியை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் தான் நாடு பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடாக மாறி வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்ற போது அதிக பால் உற்பத்தி செய்யும் 15 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. ஆனால், பால் ஏற்றுமதியில் நாம் முன்னேற முடியவில்லை. அதற்கு காரணம் நமது நாட்டின் பாலை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. நமது நாட்டின் பால் உலகளவில் தரமானதாக இல்லை. பசுக்கள் பராமரிப்பும் சுகாதாரமாக இல்லை. மேலும், பசுக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாலும் மற்ற நாடுகள் எதிர்பார்க்கும் தரத்தில் நமது நாட்டின் பால் இல்லை. இதனால் தான் பால் உற்பத்தியில் சிறந்த விளங்கினாலும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை இருந்தது.

பிரதமர் மோடி பதவியேற்றதும் பால் ஏற்றுமதியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். பசுக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான துல்லியமான தடுப்பூசி இயக்கத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் பால் உற்பத்தி அதிகரித்து, பால் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் நாடாகவும் இந்தியாவை மாற்றி உள்ளார்.

மேக் இன் இந்தியா திட்டம் மூலம் பல இளைஞர்கள் புதிய தொழில்களை தொடங்கி தொழில் வளர்ச்சியில் முன்னேறி வருகின்றனர். மேக் இன் இந்தியா திட்டம் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் கூட இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தலைவர்கள், ராணுவ வீரர்கள் அணியும் குண்டு துளைக்காத ஆடைகள் தற்போது முதல் முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் நாடு எந்த அளவுக்கு முன்னேறி உள்ளது என்பது தெளிவாகிறது.

தூத்துக்குடி துறைமுகம் சக்தி வாய்ந்த துறைமுகமாக விளங்குகிறது. இதற்கு தோல்வியே கிடையாது. இந்த மண் சக்தி வாய்ந்த மண். இந்த மண்ணில் நிறுவப்படும் எதுவும் தோல்வியடைய முடியாது. விமானம், ரெயில், சாலை, கடல் என 4 வழிகளிலும் இணைப்பு பெற்ற நகரமாக தூத்துக்குடி உள்ளது. தூத்துக்குடியை முன்னேற்ற வேண்டும் என்பதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். தூத்துக்குடியின் வளர்ச்சியில் எனது பங்கும் நிச்சயம் இருக்கும்.

தெலுங்கானா கவர்னர் பதவியை மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய பதவியாகவே நான் நினைக்கிறேன். தமிழகத்துக்கும், தெலுங்கானாவுக்கும் பாலமாக இருக்க விரும்புகிறேன். சுற்றுலா, தொழில், நீர்நிலை போன்றவற்றில் எப்படி தமிழகத்துக்கு உதவலாம் என ஆராய்ந்து வருகிறேன். அங்கே உள்ள சில நீர்நிலைகளை குடிநீருக்காக தமிழகத்துக்கு எப்படி கொண்டுவர முடியும், சுற்றுலா துறையில் தமிழகம், தெலுங்கானா இடையே எப்படி இணைப்பு பாலம் ஏற்படுத்த முடியும், அங்குள்ள முதலீடுகளை எப்படி தமிழகத்துக்கு, குறிப்பாக எப்படி தூத்துக்குடிக்கு கொண்டுவர முடியும் என சிந்தித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் பல்வேறு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் டி.ஆர்.கோடீஸ்வரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com