தியேட்டரில் ‘சீட்’ பிடிக்க நடந்த தகராறில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து அஜித் ரசிகர்கள் 4 பேருக்கு வலைவீச்சு

வேலூரில் விஸ்வாசம் திரையிடப்பட்ட தியேட்டரில் ‘சீட்’ பிடிக்க நடந்த தகராறில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக நடிகர் அஜித் ரசிகர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தியேட்டரில் ‘சீட்’ பிடிக்க நடந்த தகராறில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து அஜித் ரசிகர்கள் 4 பேருக்கு வலைவீச்சு
Published on

காட்பாடி,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. வேலூர் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரசிகர்கள் ஏராளமானோர் ஆர்வம் காட்டினர். அதனால் நேற்று முன்தினம் இரவே தியேட்டர்களின் முன்பு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. இசை நிகழ்ச்சி, வாணவேடிக்கை, மேள தாளத்துடன் பட ரிலீஸை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

பல தியேட்டர்களில் ரசிகர்கள் அஜித்தின் கட்-அவுட், பிளக்ஸ் போர்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்தனர். படம் திரையிடுவதற்கு முன்பாக படப்பெட்டி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரசிகர் ஒருவர் நாக்கில் கற்பூரம் ஏற்றி படம் வெற்றிபெற வேண்டினார்.

வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஒரு தியேட்டரில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வாசம் திரைப்படம் ரசிகர் காட்சி வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை காண நள்ளிரவே ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் முன்பாக கூடினர். இந்த நிலையில் அதிகாலை 1.30 மணியளவில் தியேட்டருக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் பிரசாத் (வயது 18), அவருடைய மாமா ரமேஷ் (30) உடன் படத்தை காண தியேட்டருக்கு வந்தார். தியேட்டரில் சீட் பிடிப்பது தொடர்பாக பிரசாத், ரமேசுக்கும், அஜித் ரசிகர்கள் 4 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. இதில், ஆத்திரம் அடைந்த 4 பேரில் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரசாத், ரமேஷை சரமாரியாக குத்தினார். இதில், தலை மற்றும் வயிற்றுப்பகுதியில் படுகாயம் அடைந்த பிரசாத் அங்கேயே ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். ரமேசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்டு படம் பார்க்க வந்த ரசிகர்கள் அலறியடித்து தியேட்டரை விட்டு வெளியேறினர். அந்த சமயம் கத்திக்குத்தில் ஈடுபட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத், ரமேஷை கத்தியால் குத்திய 4 பேர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அந்த தியேட்டரின் முன்பாக பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்.

வேலூரில் படம் பார்க்க தியேட்டரில் சீட் பிடிக்கும் தகராறில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com