மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்துக்குட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16-ந் தேதி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே 11 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நேற்று காலை தொடங்கியது.

மொத்தம் 1,163 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த மையங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் பலர் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? இல்லையா? என சரிபார்த்தனர். விடுபட்டவர்கள் சிலர் விண்ணப்பத்தை வாங்கி அங்கேயே பூர்த்தி செய்து கொடுத்தனர்.

18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் ஆர்வமுடன் முகாமுக்கு வந்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பெற்று சென்றனர். சிலர் பெயர் சேர்ப்பதற்கான உரிய ஆவணங்களை கொண்டு வந்து முகாமிலே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். இதனால் பல வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

பொதுமக்கள் பலர் பெயர்களை நீக்குதல், முகவரி மாற்றுதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தனர். பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றுதல் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் போதிய அளவு வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்பு சுருக்க முறை திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை பெறப்படுகிறது.

இந்த நிலையில் சேலம் அழகாபுரம் சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சூரமங்கலம் ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாமை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் மாறன், அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையர் சரவணன், தாசில்தார் ரமேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை பார்வையிட்டனர். இந்த சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளிலும், தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 264 வாக்குச்சாவடிகளிலும் நேற்று வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் நடந்தது. சேலம் கோட்டை அரசு மகளிர் பள்ளி, குகை மூங்கப்பாடி அரசு மகளிர் பள்ளி வாக்குச்சாவடிகளில் நடந்த சிறப்பு முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் முகாம்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, மாநகராட்சி துணை தாசில்தார் (தேர்தல்) ஜாஸ்மின் பெனாசிர் உள்பட பலர் உடனிருந்தனர்.

தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com