மாவட்டத்தில் பால் கொள்முதலை 2½ லட்சம் லிட்டராக உயர்த்த வேண்டும் அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவை 2½ லட்சம் லிட்டராக உயர்த்த வேண்டும் என அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் பால் கொள்முதலை 2½ லட்சம் லிட்டராக உயர்த்த வேண்டும் அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தல்
Published on

நாமக்கல்,

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இருந்து 492 சங்கங்களை பிரித்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை (ஆவின்) கடந்த டிசம்பர் மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதன் நிர்வாக அலுவலகம் நாமக்கல்-பரமத்தி சாலையில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் ஆவின் பாலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் குமரேஸ்வரன் வரவேற்று பேசினார். கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிர்வாக அலுவலகம் மற்றும் ஆவின் பாலகத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழைகளுக்கு இலவச மாடுகளை வழங்கியதால் வெண்மைப்புரட்சி ஏற்பட்டு உள்ளது. மேலும் தற்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்ட ஆவின் இரண்டாக பிரிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் முதல் நாமக்கல் மாவட்ட ஆவின் தனியாக செயல்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்ட ஆவினில் தற்போது 492 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 17 ஆயிரத்து 620 பேர் சங்கத்திற்கு பால் வழங்கி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் ஆவின் மூலம் தினசரி 1 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 2 லட்சத்து 50 ஆயிரம் லிட்டராக உயர்த்தி, மாநில அளவில் சிறந்த ஆவினாக செயல்பட சங்க உறுப்பினர்களும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஆவின் பாலகத்தில் முதல் விற்பனையை தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, சேலம் ஆவின் தலைவர் ஜெயராமன், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ஆர்.ஆர்.ராஜேந்திரன், துணை தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை பதிவாளர் (பால்வளம்) சந்திரசேகர ராஜா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com