குமரி கிழக்கு மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து தி.மு.க.வினர் போட்டியிட்டால் கடும் நடவடிக்கை

குமரி கிழக்கு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து தி.மு.க.வினர் போட்டியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
குமரி கிழக்கு மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து தி.மு.க.வினர் போட்டியிட்டால் கடும் நடவடிக்கை
Published on

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

குமரி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நாகர்கோவிலில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. இளைஞர் அணி மாநில துணை செயலாளர் துரை சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு தி.மு.க. நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த தேர்தலில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார்.

மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசும்போது, குமரி கிழக்கு மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து தி.மு.க.வினர் போட்டியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதையும் மீறி அவர்கள் தி.மு.க. கொடி மற்றும் தலைவர் படம் ஆகியவற்றை பயன்படுத்தினாலும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, பொதுக்குழு உறுப்பினர் சேக்தாவூது, ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, மதியழகன், எப்.எம்.ராஜரெத்தினம், நெடுஞ்செழியன், காங்கிரஸ் மாநில இலக்கிய பிரிவு தலைவர் ராஜேந்திரன், சேம் மோகன்ராஜ் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com