சிலை கடத்தல் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

பேரணாம்பட்டு அருகே சிலை கடத்தல் கும்பலில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது
Published on

பேரணாம்பட்டு,

தமிழகத்தில் புராதன சிறப்பு வாய்ந்த கோவில்களில் உள்ள சிலைகளை திருடும் கும்பல் அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதும் சிலை கடத்தல் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். சிலை திருட்டில் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்கள் பலரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளார். அவரது நடவடிக்கையால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டு இருக்கின்றன.

கடந்த ஆண்டு குடியாத்தம் பகுதியில் சிலை கடத்திய கும்பலை மாறுவேடத்தில் சென்று விரட்டிப்பிடித்து கைது செய்தார். தொடர்ந்து சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள அரவட்லா மலை கிராமத்தில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மாறுவேடத்தில் சென்றனர். அப்போது காரில் வந்த கும்பல் இவர்களை பார்த்ததும் தப்பி ஓடியது.

போலீசார் அவர்களை சினிமா பாணியில் விரட்டிச்சென்றனர். இதில் அரவட்லா மலை கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 50) என்பவரை பிடித்தனர். தப்பி ஓடிய அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (38) பங்களாமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் குளியலறை வழியாக குதித்து பதுங்கினார். அவரையும் போலீசார் பிடித்து இருவரையும் கைது செய்தனர். மேலும் சிலர் தப்பி விட்டனர். அவர்கள் விட்டுச்சென்ற காரில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 3 ஐம்பொன் சாமி சிலைகளை போலீசார் மீட்டனர்.

இதனை தொடர்ந்து தப்பி ஓடிய மற்றவர்களை பிடிக்க ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தப்பி ஓடியவர்களில் மாதனூர் அருகே உள்ள அகரம்சேரியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குருசாமி (27) என்பவர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள சிலைகளும் மாதனூர் அருகே உள்ள பூமாலை கிராம மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமானவையாகும். இந்த சிலைகள் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொள்ளை போனது. சென்னை சைதாப்பேட்டை ஆன்மிக மடம் மூலம் கடந்த 1989-ம் ஆண்டு இந்த சிலைகள் பெறப்பட்டிருந்தது.

சிலை திருடப்பட்டு ஒரு வருடத்திற்குள் துரித நடவடிக்கை எடுத்து கும்பலை கைது செய்த போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேலை பல்வேறு தரப்பினரும் மனதார பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அரவட்லா மலை கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன், ஆறுமுகம் மற்றும் அகரம்சேரி குருசாமி ஆகியோரை போலீசார் குடியாத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com