தேர்வில், கலெக்டர் ஆக விரும்புவதாக பதில் எழுதிய பள்ளி மாணவியை, தனது இருக்கையில் அமர வைத்து ஊக்கப்படுத்திய கலெக்டர்

தேர்வில், கலெக்டர் ஆக விரும்புவதாக பதில் எழுதிய பள்ளி மாணவியை நேரில் அழைத்து வாழ்த்திய கலெக்டர் அன்பழகன், அந்த மாணவியை தனது இருக்கையில் அமரவைத்து ஊக்கப்படுத்தினார்.
தேர்வில், கலெக்டர் ஆக விரும்புவதாக பதில் எழுதிய பள்ளி மாணவியை, தனது இருக்கையில் அமர வைத்து ஊக்கப்படுத்திய கலெக்டர்
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆண்டுத்தேர்வில், ஆங்கில பாடத்திற்கான தேர்வில் நீங்கள் எதிர்காலத்தில் யாராக ஆசைப்படுகிறீர்கள்? உங்களின் முன்மாதிரி மனிதர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்விக்கு பதில் அளித்த 6-ம் வகுப்பு மாணவி மனோபிரியா, எதிர்காலத்தில் நான் மாவட்ட கலெக்டராக விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட கலெக்டர் தான் என்று விடை எழுதியிருக்கிறார். விடைத்தாளை திருத்தும்போது, மாணவி அளித்திருந்த அந்த பதில் ஆசிரியரை பெருமிதம் கொள்ள செய்யும் வகையில் இருந்தது.

மேலும் இந்த தகவலை பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பூபதி, மாவட்ட கலெக்டர் அன்பழகனின் எண்ணுக்கு வாட்ஸ்-அப் வாயிலாக தெரிவித்துள்ளார். இதனைப்பார்த்த மாவட்ட கலெக்டர், எதிர்காலத்தில் மாவட்ட கலெக்டராக வேண்டும் என்ற மாணவியின் கனவுக்கு அடித்தளமிடும் வகையிலும், அவரது எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அந்த மாணவியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வாருங்கள், என்றார்.

மாணவிக்கு வாழ்த்து

இதையடுத்து பள்ளி ஆசிரியர் பூபதி, மாணவி மனோபிரியா மற்றும் விளையாட்டு, கலை, இலக்கிய போட்டிகளில் சிறந்து விளங்கி பதக்கம் பெற்ற அப்பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து வந்து மாவட்ட கலெக்டரிடம் அறிமுகப்படுத்தினார்.

மாவட்ட கலெக்டராக விரும்பிய மாணவியை கலெக்டர் அன்பழகன் அழைத்துப் பாராட்டி, தேர்வில் அந்த மாணவி எழுதிய விடைத்தாளையும் பார்த்தார். பின்னர் அவர், யாரும் எதிர்பாராத வகையில், தான் அமர்ந்திருந்த இருக்கையில் அந்த மாணவியை அமரவைத்து, நன்கு படித்து எதிர்காலத்தில் நீங்கள் நினைத்ததைப்போல் ஒரு மாவட்ட கலெக்டராக உருவாகி இதுபோன்ற இருக்கையில் அமர்ந்து ஏழை, எளிய மக்களுக்கும் நமது நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

ஆசிரியர்களை மறக்கக்கூடாது

மேலும், மாணவ-மாணவிகளிடம் கலெக்டர் அன்பழகன் பேசும்போது கூறியதாவது:-

அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான பயணமாக நமது நடவடிக்கைகள் அமைய வேண்டும். நமது வாழ்க்கையில் மறக்க முடியாத உறவு ஆசிரியர் உறவு. எனது பள்ளிக்காலத்தில் எனக்கு ஆசிரியராக இருந்தவர் ஆறுமுகம். அவரின் நினைவாக இன்றும் எனது வங்கிக்கணக்கிற்கான கடவுச்சொல்லாகவும், செல்போனிற்கான கடவுச்சொல்லாகவும் அவரது பெயரையே வைத்துள்ளேன்.

நீங்களும் உங்களின் ஆசிரியர்களை எந்தச்சூழலிலும் மறக்கக்கூடாது. அனைவரும் அழகாக எழுதும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். முளைக்கின்ற விதையும் முயற்சி செய்தால்தான் பூமித்தாய் தனது தாழ் திறப்பாள் என்ற வரிகளுக்கு ஏற்ப தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் நமது வாழ்க்கைப்பயணத்தை நாம் மேற்கொண்டால்தான் நமக்கான வெற்றி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு அவர்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில் பதிலளித்தார். அதனைத்தொடர்ந்து வருகை தந்த அனைவருக்கும் இனிப்புகளை மாவட்ட கலெக்டர் வழங்கி வாழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com