மத்திய அரசு திட்டத்தில், மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு கடன் வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி

மத்திய அரசு திட்டத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு கடன் வாங்கி தருவதாக 2 பேர் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக, திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் புகார் அளித்தனர்.
மத்திய அரசு திட்டத்தில், மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு கடன் வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி
Published on

திண்டுக்கல்,

ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்ய மத்திய அரசு திட்டத்தில் கடன் வாங்கி தருவதாக 2 பேர் மோசடி செய்ததாக கூறி தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர். இதுகுறித்து ஏரி, கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்க மாநில தலைவர் பரமசிவம், செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த 2 பேர், விவசாயிகளை தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது, பாலித்தீன் பைகளுக்கு தடை செய்யப்பட்டதால், மாற்றுப்பை தயாரிக்கப்படுகிறது. இதற்கு மரவள்ளி கிழங்கின் மாவு பயன்படுத்தப்பட உள்ளது. எனவே, மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்காக பிரதான் மந்திரி பாரதீய ஜனசக்தி கேந்திரா திட்டத்தின் மூலம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.

இதில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும் என்றனர். மேலும் அந்த கடனை பெற்று தருவதாகவும் அவர்கள் கூறினர். இதற்காக பட்டா, சிட்டா நகல், ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் ரூ.10 ஆயிரம் வாங்கினர். மாவட்டம் முழுவதும் சுமார் 70 விவசாயிகளிடம் அவ்வாறு பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. மேலும், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்வதற்காக உழவு செய்து நிலத்தை தயாராக வையுங்கள் என்றும் தெரிவித்தனர். அதன்படி நிலத்தை உழவு செய்து தயாராக வைத்தோம். ஆனால், இதுவரை யாருக்கும் கடன் வாங்கி தரவில்லை. அதேபோல் மின்சார ஆட்டோ விற்பனையாளர் ஒப்பந்தம் வாங்கி தருவதாக 3 பேரிடம் தலா ரூ.1 லட்சம் வாங்கி உள்ளனர். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தவும் ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com