ஜவளகிரி வனப்பகுதியில் 2 சிறுத்தைப்புலிகள் நடமாட்டம்

ஜவளகிரி வனப்பகுதியில் 2 சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலால் வனத் துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
ஜவளகிரி வனப்பகுதியில் 2 சிறுத்தைப்புலிகள் நடமாட்டம்
Published on

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ஜவளகிரி, அய்யூர், நொகனூர், உரிகம், அஞ்செட்டி, பெட்டமுகிலாளம் உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. ஆண்டுதோறும் ராகி பயிர் அறுவடையை குறி வைத்து கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இந்த வனப்பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

அக்டோபர், நவம்பர் மாதத்தில் வரக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் சுமார் 4 மாத காலம் வனப்பகுதிகளில் முகாமிட்டு விவசாய பயிர்களை நாசம் செய்வது தொடர்ந்து நடக்கின்றன. யானைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வனப்பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை தாலுகா ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் 2 சிறுத்தைப்புலிகள் நடமாடுவது பதிவாகி உள்ளது. இதைப் பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின் பேரில் ஜவளகிரி வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனக்குழுவினர் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்த சிறுத்தைப்புலிகள் ஜவளகிரி வனப்பகுதியில் ஏற்கனவே இருந்த சிறுத்தைப்புலிகள் என வனத்துறையினர் தெரிவித்தனர். அதே நேரத்தில் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த சிறுத்தைப்புலிகள் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், ஜவளகிரி வனப்பகுதியையொட்டி வசிக்க கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆடு, மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்க்க வர வேண்டாம் என்றனர். மேலும் வனத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com