

மண்டியா,
மறைந்த நடிகர் அம்பரீசின் சொந்த ஊர், மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா தொட்டரசினகெரே கிராமமாகும். இவர் இறந்த செய்தியை கேட்டு அந்த ஊரில் உள்ள அவரது உறவினர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.
மேலும் அம்பரீசின் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் மண்டியா முழுவதும் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை அறிவிக்கப்படாத முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் மளிகைக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
மேலும் அரசு, தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. வாடகை கார்கள், ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. அத்துடன் நடிகர் அம்பரீசுக்கு இரங்கல் தெரிவித்து நகரின் பெரும்பாலான சாலைகளில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு இருந்தன. அதுபோல் பல்வேறு அமைப்பினரும் மண்டியாவின் மகன் அம்பரீசுக்கு இரங்கல், மண்ணின்மைந்தன் அம்பரீசுக்கு அஞ்சலி என ஏராளமான பேனர்களையும் ஆங்காங்கே வைத்திருந்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் பெங்களூருவில் இருந்து நடிகர் அம்பரீசின் உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டியாவுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அவரது உடல் ரசிகர்கள், மக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக மண்டியா விசுவேஸ்வரய்யா விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் வைக்கப்பட்டு இருந்தது.