

சரவணம்பட்டி,
கோவில்பாளையத்தில் தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையை அடுத்த கோவில்பாளையம் செந்தூர் கவையகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரூபன் (வயது31). இவர் பவுண்டரிகளுக்கு தேவைப்படும் உதிரிபாகங்களை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். ரூபனுக்கு விமலா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் ரூபனின் வீட்டிற்கு உறவினர்கள் வந்தனர். அவர்களை அழைத்துக்கொண்டு ரூபன் இரவு சினிமாவிற்கு சென்றார். சினிமா முடிந்து நள்ளிரவில் அவர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரூபன் உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.