கம்பம் பகுதியில், லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகம்

கம்பம் பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக உள்ளது. எனவே லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம் பகுதியில், லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகம்
Published on

கம்பம்,

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி சீட்டு விற்பனை கொடிக்கட்டி பறந்தது. இதனை பயன்படுத்தி கொண்ட சமூக விரோதிகள் கள்ளநோட்டைப்போல் போலி லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்தனர். இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கு மேல் லாட்டரி சீட்டுகள் வாங்குவதில் செலவிட்டனர். இதனால் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடைசெய்யவேண்டும் என பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து தமிழக அரசு லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதித்தது. அதன்பின்பு லாட்டரி சீட்டுகள் விற்பனை இல்லாமல் இருந்தது.

ஆனால் கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு அம்மாநில அரசு தடைவிதிக்கவில்லை. இதனால் தேனி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் கேரளமாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாட்டரி சீட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து அவற்றை கம்பம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கின்றனர். இதன் விற்பனை அமோகமாக உள்ளது.

இந்தநிலையில் பரிசு விழும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் பலர் தினமும் குறைந்த பட்சம் ரூ.500-க்கு மேல் செலவு செய்து லாட்டரி சீட்டுகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதனை சமூக விரோதிகள் சிலர் பயன்படுத்திக்கொண்டு போலி லாட்டரி சீட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். இந்த போலி லாட்டரி சீட்டுகளை வாங்கி பரிசு விழாமல் ஏமாற்றம் அடைவதாக தொழிலாளர்கள் பலர் கூறுகின்றனர். மேலும் ஆன்லைன் மூலமே குலுக்கல் முடிவுகளை அறிய முடியும் என்பதால் இணையதள மையத்திலும் பணத்தை செலவழிக்கின்றனர். லாட்டரி சீட்டுகள் விற்பனையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்க தொடங்கியுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தால் பெயரளவிற்கு சில்லறை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மொத்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கம்பம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுப்பதற்கு தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com