

காரைக்குடி,
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் கொரோனா தொற்று பரவ தொடங்கியதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் தியேட்டர்களின் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்து வந்த நிலையில் தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழகத்தில் விரைவில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 31-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி முதல் போதிய சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் அமரும் வகையில் 50 சதவீத இருக்கைகள் பயன்படுத்தி தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவினால் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களின் உரிமையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் வருகிற 14-ந்தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளதால் அன்றைய தினம் புதிய திரைப்படங்கள் வெளியாகலாம் என்ற நம்பிக்கையில் தற்போது நேற்று முதல் தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை, காளையார்கோவில், மானாமதுரை ஆகிய பகுதியில் சுமார் 25 தியேட்டர்கள் வரை உள்ளன. காரைக்குடி பகுதியில் மட்டும் 4 தியேட்டர்கள் உள்ளன. இந்நிலையில் காரைக்குடியில் நேற்று தியேட்டர்களை அதன் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியை தொடங்கினர்.
கடந்த 7 மாதத்திற்கும் மேலாக மூடங்கி கிடந்ததால் தியேட்டர்களில் தூசி படர்ந்து குப்பைகளாக இருந்தது. இதையடுத்து அவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இருக்கைகள் முழுவதையும் சரி செய்து அதில் பழுதான இருக்கைகளை அகற்றி விட்டு புதிய இருக்கைகளை பொருத்தும் பணியும் நடைபெற்றது. மேலும் தியேட்டர்களில் உள்ள இருக்கை பகுதி, வெளிப்புற பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதுதவிர அரசு வழங்கிய ஆலோசனையின்படி 50 சதவீத இருக்கைகளுடன் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படியான வாசகங்களை எழுதும் பணியும் நடைபெற்று வருகிறது.