அரசியல் சாசனம் குறித்த விவாதத்தில் கர்நாடக மேல்-சபையில் கூச்சல்-குழப்பம்

அரசியல் சாசனம் குறித்த விவாதத்தில் கர்நாடக மேல்-சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
அரசியல் சாசனம் குறித்த விவாதத்தில் கர்நாடக மேல்-சபையில் கூச்சல்-குழப்பம்
Published on

பெங்களூரு,

கர்நாடக மேல்-சபையில் நேற்று அரசியல் சாசனம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர் பி.ஆர்.ரமேஷ் பேசினார். அவர் பேசுகையில், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்தினர் என்றார். இதற்கு ஆளும் பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பா.ஜனதா உறுப்பினர்கள் ரவிக்குமார், பிரானேஷ் உள்ளிட்டோர் பேசும்போது, ஆங்கிலேயர்கள் மகாத்மா காந்தியை ஷூ காலில் உதைத்தனர். அத்தகையவர்களை நீங்கள் பாராட்டி பேசுவது சரியல்ல என்றனர்.

உங்களின் கலாசாரம் என்ன?

அதைத்தொடர்ந்து பேசிய சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி, நமது நாட்டின் செல்வங்களை ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தனர். இந்தியர்களை அவர்கள் அடிமைகளாக நடத்தினர். ஆங்கிலேயர்களை நீங்கள் பாராட்டுவதாக இருந்தால் இங்கு சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டுள்ள காந்தியின் படத்தை அகற்றிவிடுங்கள். ஆங்கிலேயர்களின் ஆட்சி நிர்வாகம் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தால், எதற்காக நமது தலைவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார்கள்?. ஆங்கிலேயர்களை பாராட்டுவதன் மூலம் நீங்கள் உங்களின் கலாசாரம் என்ன? என்று காட்டியுள்ளீர்கள் என்றார்.

அப்போது பா.ஜனதா உறுப்பினர் ரவிக்குமார் குறுக்கிட்டு, ஆங்கிலேயர்கள் நமது நாட்டை மட்டும் பாழாக்கவில்லை, நமது தலைவர்களிடையே விஷ விதைகளை விதைத்து கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தினர். அத்தகைய ஆங்கிலேயர்களை நீங்கள் பாராட்டி பேசியது, வெட்கக்கேடானது என்றார்.

கூச்சல்-குழப்பம்

அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து குரலை உயர்த்தி எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜனதாவினரும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. அதன்பிறகு மீண்டும் பேச்சை தொடங்கிய பி.ஆர்.ரமேஷ், ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்தபோது, 75 மன்னர்கள் பல்வேறு பகுதிகளில் ஆட்சி நடத்தினர். வடக்கு மற்றும் தெற்கு என்ற வேறுபாடு இருந்தது. நாடு எங்கு 2 ஆக பிரிந்துவிடுமோ என்ற ஆதங்கம் இருந்தது. ஆங்கிலேயர்கள் விஷ விதைகளை விதைத்தாலும், நமது தலைவர்கள் ஒற்றுமையாக இருந்தனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com