

க.பரமத்தி,
கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி நேற்று கரூர் கே.வி.பி நகர், பெரியார் நகர், காமராஜபுரம், செங்குந்தபுரம், காந்திகிராமம் டபுள்டேங்க், ஹவுசிங் யூனிட் பகுதி, அண்ணா நகர், சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.மேலும் வீடு, வீடாக சென்று முதியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்கள் சம்பந்தமான பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால் கரூரில் ரியல் எஸ்டேட் தொழிலும், வீட்டுமனை வாங்குவதிலும், பத்திர பதிவு செய்வதிலும் பிரச்சினையாகவே உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நத்தம் இலவச வீட்டுமனை பட்டாக்கள், ஆட்சேபனை இல்லாத புறம்போக்குகளில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் மேலும் நத்தம் செட்டில்மெண்ட் அமைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அளவில் உட்பிரிவு செய்யப்பட்ட நத்தம் தோராயமான மனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்வேன்.
மேலும் 43 வார்டுகள், 12 ஊராட்சிகளில் தனித்தனியாக அலுவலகம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் சொல்லும் குறைகளை விரைவில் தீர்க்கப்படும். மேலும் பட்டா, சிட்டா உள்ளிட்ட அரசு சான்றிதழ்கள் பெற இலவச இ.சேவை மையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து எனது வாழ்நாளை கரூர் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிப்பேன். ஆகவே வாக்காளர்கள் சிந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.