குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நோய் பரப்பும் செயற்கை நீரூற்று நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம்

குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்று நோய் பரப்பும் வகையில் காட்சி அளிக்கிறது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நோய் பரப்பும் செயற்கை நீரூற்று நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நாகர்கோவில் கே.பி.ரோட்டில் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், இ-சேவை மையங்கள் போன்றவையும் செயல்படுகின்றன.

இவற்றின் அருகிலேயே அதாவது டதி பள்ளி சந்திப்பு பகுதியில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டுள்ளது. அதில் வேளாண்மைத்துறை அலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலகம், கூட்டுறவுத்துறை அலுவலகங்கள் என பல்வேறு துறை அலுவலகங்களும் செயல்படுகின்றன.

இதனால் அலுவலக வேலை நாட்களில் தினமும் இங்குள்ள அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களும், பல்வேறு அலுவல் காரணமாக ஆயிரக்கணக்கானோரும் இங்கு வருவார்கள். மேலும் டதி பள்ளி சந்திப்பு வழியாக கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லக்கூடியவர்களில் ஏராளமானோர் கூடுதல் கட்டிடத்தின் நுழைவு வாயில் வழியாக சென்று வருகிறார்கள்.

இந்த கூடுதல் கட்டிடத்தின் நடைபாதை ஓரத்தில் பெரிய, பெரிய கூழாங்கற்களைக் கொண்டு அழகுற செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டிடம் திறக்கப்பட்டதில் இருந்து சில மாதங்கள் வரை இந்த செயற்கை நீரூற்று செயல்பட்டது. அதன் பிறகு அந்த நீரூற்று செயல்பாடு இழந்தது. இதனால் செயற்கை நீரூற்றின் அடிப்பகுதியில் தொட்டி போன்ற அமைப்பில் பல மாதங்களாக தண்ணீர் அப்படியே தேங்கி கிடக்கிறது. அதில் அப்பகுதியில் உள்ள மரங்களின் இலைகள், சருகுகள் விழுந்து அழுகி துர்நாற்றம் வீசுவதோடு, தண்ணீரின் நிறம் கருமை கலந்த பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது.

மேலும் இவ்வாறு பல மாதங்களாக தேங்கி கிடக்கும் தண்ணீரில் கொசுக்களும் உற்பத்தியாகி வருகின்றன. அந்த கொசுக்கள் கடிக்கும் பட்சத்தில் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே அலங்காரத்துக்காக அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று, தற்போது நோய் பரப்பும் நீரூற்றாக மாறியிருக்கிறது.

இதையெல்லாம் விட இதை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் பெரும் குறையாக இருக்கிறது. இவ்வழியாக கலெக்டர் முதல் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் வரை வந்து சென்றாலும், யாரும் இதை பொருட்படுத்தாமல் இருப்பது விந்தையிலும் விந்தையாகும். இனிமேலாவது அதிகாரிகள் தங்களது மெத்தனப்போக்கை கைவிட்டு, செயல்படாமல் இருக்கும் இந்த நீரூற்றை சரி செய்து, அதில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள், ஊழியர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com