குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,500 விநாயகர் சிலைகள் கரைப்பு

குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,500 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,500 விநாயகர் சிலைகள் கரைப்பு
Published on

நாகர்கோவில்,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் குமரி மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் சில நாட்களாக காலை, மாலை நேரங்களில் பூஜை செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கப்பட்டன.

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 150 சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு கொண்டு வரப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் அசோகன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, பொற்றையடி, கொட்டாரம், விவேகானந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடைந்தது. காந்தி மண்டபம் பகுதியில் வாகனங்களில் இருந்து சிலைகளை இறக்கி ஊர்வலமாக சங்கிலித்துறை கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர், கடற்கரையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இதில் கன்னியாகுமரி நகர ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் முருகன், பகவதி அம்மன் பக்தர்கள் சங்க தலைவர் வேலாயுதம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலை கரைப்பையொட்டி கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தோவாளை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 150 சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் தோவாளை முருகன் கோவில் அடிவாரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கி பள்ளிகொண்டான் அணையில் கரைக்கப்பட்டது. முன்னதாக ஊர்வலத்தை ஒன்றிய துணை தலைவர் முருகன் தலைமையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பக்தர்கள் சேவா சங்க தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்து முன்னணி மாநில பேச்சாளர் காந்திமதி நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் அந்த பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபினபு பார்வையிட்டார்.

நாகர்கோவில் நகரம் மற்றும் ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சார்பில் 250 விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் நம்பிராஜன் மற்றும் ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை அமைப்பாளர் பொன்னையா தொடங்கி வைத்தார். ஊர்வலமானது நாகராஜா திடலில் இருந்து ஒழுகினசேரி, வடசேரி, மணிமேடை, கோட்டார், பீச்ரோடு, என்.ஜி.ஓ. காலனி, மேல கிருஷ்ணன்புதூர் வழியாக சங்குத்துறை கடலை சென்றடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் ஒவ்வொன்றாக கரைக்கப்பட்டது.

தக்கலை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 153 சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டது. இந்த சிலைகள் நேற்று வைகுண்டபுரம் ராமர் திருக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் மண்டைக்காடை சென்றடைந்தது. தொடர்ந்து அங்குள்ள கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதில் இந்து முன்னணியை சேர்ந்த தங்க மனோகரன், ஜான்சன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 150 விநாயகர் சிலைகள் மண்டைக்காடு கடலில் கரைக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்து முன்னணியை சேர்ந்த மிசாசோமன், ஆர்.கே.கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிள்ளியூர் ஒன்றியம் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 125 விநாயகர் சிலைகள், கூனாலுமூடு பகுதியில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மிடாலம் கடலில் கரைக்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்து முன்னணியை சேர்ந்த நெல்லை ஆறுமுகசாமி கலந்து கொண்டார்.

திருவட்டார் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 183 விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டது. இந்த விநாயகர் சிலைகள் செருப்பாலூர் முத்தாரம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திற்பரப்பு அருவியில் கரைக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்து முன்னணியை சேர்ந்த வக்கீல் ராமமூர்த்தி மற்றும் ரவி கலந்து கொண்டனர். மேல்புறம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 160 விநாயகர் சிலைகள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்து முன்னணியை சேர்ந்த கோவை முருகானந்தம், சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்சிறை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 130 விநாயகர் சிலைகள் தேங்காப்பட்டணம் கடலில் கரைக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்து முன்னணியை சேர்ந்த தங்க மனோகரன், செல்வநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குழித்துறை நகர இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 25 விநாயகர் சிலைகள், பம்மத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழ்நாடு சிவசேனா சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 108 விநாயகர் சிலைகள், அளப்பங்கோடு ஈஸ்வரகால பூதத்தான் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மேல்புறம் ஒன்றிய அலுவலகம், குழித்துறை தபால் நிலைய சந்திப்பு வழியாக வி.எல்.சி மைதானம் கொண்டு வரப்பட்டு இந்துமுன்னணியினருடன் இணைந்து பூஜை செய்தனர். தொடர்ந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.

மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏதும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com