கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை - ஆளுங்கட்சி மீது ரங்கசாமி குற்றச்சாட்டு

புதுவை மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என்று ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.
கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை - ஆளுங்கட்சி மீது ரங்கசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை அண்ணாமலை ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் டி.பி.ஆர். செல்வம், திருமுருகன், சுகுமாறன், என்.எஸ்.ஜெ. ஜெயபால், சந்திர பிரியங்கா, கோபிகா ஆகியோர் கலந்துகொண்டனர். அ.திமு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எம்.எல்.ஏ.க்கள் தவிர கட்சி நிர்வாகிகள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மதியம் 1.30 மணி வரை நடந்தது. கூட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

கூட்டத்தின் முடிவில் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக புதுவை மாநிலத்தில் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. உள்கட்டமைப்பு வளர்ச்சி ஏற்படுத்தவில்லை. வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவில்லை. மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில வளர்ச்சி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த தொழிலாளர்களின் திட்டங்களை கூட அரசு கொண்டு வரவில்லை.

கட்டுமான பணிக்கான மணல் கொண்டு வருகிறோம் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை கொண்டுவரவில்லை. என்ன காரணத்திற்காக அந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது, ஏன் மணலை கொண்டுவரவில்லை என்பது தெரியவில்லை. பதிவு துறையில் தினமும் குழப்பம் நடக்கிறது. ஒரு நாள் பதியலாம் என்கின்றனர். அடுத்த நாள் பதிவு இல்லை என்கின்றனர். இதனால் புதுவை மாநிலத்தில் வீட்டு மனைகளை விற்பதும், வாங்குவதும் மிகவும் சிரமமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்கள் எதையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை, வளர்ச்சி திட்டங்களையும் கொண்டுவரவில்லை என்பது மக்களின் எண்ணமாக உள்ளது.

ஆட்சியாளர்கள் எதற்கெடுத்தாலும் யாரையாவது குறை சொல்லுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பதற்கு எனது மீதும், கவர்னர் மீதும், மத்திய அரசின் மீதும் பழிபோடுகின்றனர். இந்த காரணத்தை சொல்லியே எந்த திட்டமும் கொண்டுவரவில்லை.

நான் முதல்-அமைச்சராக இருந்த போது இதே அதிகாரம் தான் இருந்தது. இதேபோல் பல சிரமங்கள் இருந்தன. அப்போதைய கவர்னர் கேள்விகள் கேட்கத்தான் செய்தார். இருந்தாலும் அவருக்கு உரிய பதிலை தெரிவித்து அனுமதி பெற்று எல்லா திட்டங்களையும் கொண்டு வந்தோம். வளர்ச்சி பணிகள் எல்லாவற்றையும் செயல்படுத்தினோம். தற்போது அமைச்சர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com