ஏழைகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் - மத்திய-மாநில அரசுகளுக்கு குமாரசாமி எச்சரிக்கை

ஏழைகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்று மத்திய -மாநில அரசுகளுக்கு குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏழைகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் - மத்திய-மாநில அரசுகளுக்கு குமாரசாமி எச்சரிக்கை
Published on

பெங்களூரு,

ஜனதா தளம் (எஸ்) சார்பில் பெங்களூரு காமாட்சிபாளையா பகுதியில் ஏழை மக்களுக்கு உணவு தானிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு, ஏழை மக்களுக்கு உணவு தானிய தொகுப்பை வழங்கி பேசியதாவது:-

உணவு தானிய தொகுப்பை பெற பெரிய அளவில் இங்கு கூட்டம் கூடியுள்ளது. இதை பார்க்கும்போது, கர்நாடக அரசு சரியான முறையில் மக்களுக்கு உதவி செய்யவில்லை என்பது தெரிகிறது. உணவு தானியங்களை அரசு கொடுத்திருந்தால், இந்த அளவுக்கு மக்கள் கூட்டம் இங்கு கூடியிருக்காது.

விளையாட வேண்டாம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு செல்கிறார்கள். குளிப்பதற்கு கூட வாய்ப்பு வழங்கவில்லை. சிறுதொழில் துறையினருக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிக நேரம் பேச வேண்டியுள்ளது. அதற்கு இப்போது நேரம் போதாது. விவசாயிகளுக்கு கடன் திட்டங்களை அறிவித்துள்ளனர். இது தொகுப்பு அல்ல, இது துணை பட்ஜெட்.

மத்திய-மாநில அரசுகள் ஏழைகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். ஏழை மக்கள் கவுரவமாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் அறிவிப்பால் எந்த பயனும் இல்லை. மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு மக்கள், நெருக்கடியான நிலையிலும் அரசு கருவூலத்தை நிரப்புகிறார்கள்.

எந்த பயனும் இல்லை

நாட்டில் 40 கோடி மக்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கர்நாடகத்தில் 50 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினாலும் ரூ.2,500 கோடி தான் செலவாகும். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தினமும் உதவிகளை அறிவிக்கிறார். அதனால் எந்த பயனும் இல்லை.

தொலைக்காட்சிகளில் வருங்காலம் குறித்து ராசி பலன் கூறும் நிகழ்ச்சிக்கும், நிர்மலா சீதாராமன் அறிவிக்கும் தொகுப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு ஏழை மக்களுக்கு உதவுகிறோம். இந்த மாநில மக்கள் எப்போது இதை புரிந்து கொள்வார்களோ எனக்கு தெரியாது. நாட்டை பாழாக்க வேண்டாம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com